×

இ-பாஸ் முறையை ரத்துசெய்ய தமிழகஅரசு தயங்குவது ஏன்? சமூக ஆர்வலர்கள் கேள்வி

சென்னை: இ-பாஸ் முறை தேவையில்லை என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் தமிழக அரசு ரத்து செய்ய தயங்குவது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து, ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தற்போது முழு ஊரடங்கு நீடிக்கிறது. மற்ற நாட்களில் இயல்புநிலையில்தான் பொதுமக்கள் சகஜமாக நடமாடி வருகின்றனர்.

இந்நிலையில், பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்லவும், வெளிமாநிலங்களுக்கு செல்லவும், வசதியாக இ-பாஸ் முறை கொண்டு வரப்பட்டது. தற்போது அதில் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. உரிய காரணங்கள் கூறியும் இ-பாஸ் கேட்பவர்களுக்கு கிடைக்கவில்லை. இதை கருத்தில் கொண்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பலமுறை அறிக்கை விட்டார். ஆகஸ்ட் 1ம் தேதி 3ம் கட்ட ஊரடங்கு தளர்வை மத்திய அரசு அறிவித்தபோது, மாநிலத்திற்குள்ளேயும், வெளி மாநிலங்களுக்கு செல்லவும் இ-பாஸ் தேவையில்லை என கூறியது. இதை தமிழக அரசு கருத்தில் கொள்ளவே இல்லை. இ-பாஸ் முறை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதனால் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் பயணம் செய்ய இ-பாஸ் முறை தேவையில்லை என மாநிலங்களுக்கு மத்திய உள்துறை மீண்டும் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்தது. இதையும் தமிழக அரசு ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. இ-பாஸ் முறையை ரத்து செய்யாமல் உள்ளது. விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் தற்போது வழங்கப்பட்டாலும் மக்களின் சிரமம் தீர்ந்தபாடில்லை. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, உறவினர் இறப்பு, உறவினர் வீட்டு திருமண நிகழ்வு, அவசர மருத்துவ உதவிக்காக மருத்துவமனைக்கு செல்வது, வேலை நிமித்தமாக வந்தவர்கள் திரும்ப சொந்த ஊர் போவதில் சிக்கல் போன்றவை நீடித்துக் கொண்டு இருக்கிறது. விண்ணப்பித்தால் உடனடியாக இ-பாஸ் வழங்கப்படும் என்று அரசு அறிவித்த நாளில் இருந்து அதிக அளவில் இ-பாஸ் பெற்றவர்கள் பொதுமக்கள் அல்ல. அரசு அதிகாரிகளுக்கு வேண்டப்பட்டவர்கள்தான் இந்த இ-பாசை பயன்படுத்துகின்றனர். பொதுமக்களைப் பற்றி கவலைப்படவில்லை.

இ-பாஸ் நடைமுறை தேவையற்றது என்று மத்திய அரசு ஒன்றுக்கு இரண்டு முறை வலியுறுத்திக் கூறிய பிறகும் தமிழக அரசு அதை கேட்காமல் இருப்பது விந்தையாக இருக்கிறது. அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் நன்றாக சம்பாதிக்கிறார்கள் என்பதை தவிர இ-பாஸால் வேறு எந்த பயனும் இல்லை. இதனால்தான் இதை ரத்து செய்ய அரசு மறுக்கிறது. மத்திய அரசு தற்போது சினிமா படப்பிடிப்பு நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது. இன்னும் இ-பாஸ் முறையை தமிழக அரசு ரத்து செய்ய மறுப்பது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேட்கின்றனர்.


Tags : government ,activists ,Tamil Nadu , Social activists question why the Tamil Nadu government is reluctant to abolish the e-pass system
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...