×

செங்கல்பட்டு அருகே பூட்டை உடைத்து பழமையான சிவன் கோயிலில் வெள்ளிப்பொருட்கள் கொள்ளை: பழமையான ஐம்பொன் சிலைகள் தப்பின

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பூட்டை உடைத்து சிவன் கோயிலில் வெள்ளிப்பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அதிர்ஷ்டவசமாக  பழமையான ஐம்பொன் சிலைகள் தப்பின. இது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்த களத்தூர் பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மீனாட்சி அம்பாள் சமேத முன்குடுமீஸ்வரர் ஆலயம் உள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் நேற்று முன்தினம் கோயில் அர்ச்சகர் நாள்தோறும் செய்யவேண்டிய நித்ய பூஜைகளை முடித்துவிட்டு கோயிலை பூட்டி சென்றார்.

நேற்று அதிகாலை கோயிலுக்கு வந்த அர்ச்சகர் கோயில் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார. உடனே, இது குறித்து, கோயில் தர்மகர்த்தாவுக்கு தகவல் கொடுத்தார். அங்கு  வந்த தர்மகர்த்தா கோயிலின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது சிவபெருமானுக்கு சாத்தக்கூடிய வெள்ளி விபூதிப்பட்டை, அம்பாளுக்கு சாத்தக்கூடிய 1 சவரன் தங்க தாலிப்பொட்டு, வெள்ளி வேல் (சூலம்) உள்பட சுமார் இரண்டு லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட்டு இருந்த அறையின் பூட்டை உடைக்க முடியாததால் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐம்பொன் சிலைகள் தப்பின.

இச்சம்பவம் குறித்து உடனடியாக அவர் அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறையினர் மற்றும் செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவம் அறிந்ததும் தொல்லியல் துறை அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் போலீசார் ஆலயம் முழுவதும் தடயங்கள் மற்றும் கைரேகைகளை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. கடந்த ஒரு வாரத்தில் தொடர்ந்து ஆனூர், ஆமூர்,கிராமங்கள் உள்பட 5 கோயில்களில் திருட்டு நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : idols ,Chengalpattu ,Shiva ,temple ,Silver robbery , Chengalpattu, breaking the lock, ancient Shiva temple, silverware, loot
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!