×

தீபாவளி சீட்டு பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை: மதுராந்தகம் அருகே சோகம்

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த சிலாவட்டத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (32). இவர் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி அப்பகுதியை சேர்ந்த மக்களிடம் தீபாவளி பண்டு பிடித்துள்ளார். ஆனால், சொன்னபடி அவரால் தீபாவளிக்கு வழங்கு வேண்டிய பட்டாசு, மளிகை பொருட்கள், அரிசி உள்ளிட்டவற்றை வழங்க முடியவில்லை. இதனைத்தொடர்ந்து, பணம் கட்டிய மக்கள் தொடர்ந்து அவரிடம் தாங்கள் கட்டிய பணத்தை திரும்ப தருமாறு கேட்டு வந்துள்ளனர். இந்நிலையில், அவர் பணம் கொடுத்தவர்களுக்கு பதில் சொல்ல முடியாததால் தலைமறைவாகி விட்டார் என கூறப்படுகிறது. இதனையடுத்து, பணம் கட்டியவர்கள் அவரது தம்பியான வழக்கறிஞர் செந்தில்நாதன் (30) என்பவரிடம் நீங்கள் இந்த பணத்தை திரும்ப செலுத்தியாக வேண்டுமென நிர்ப்பந்தம் செய்து வந்துள்ளனர்.

செந்தில்நாதனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வரும் வெள்ளிக்கிழமையன்று ஊரடங்கு காரணத்தினால் எளிமையான முறையில் திருமணம் நடைபெற இருந்துள்ளது. இந்நிலையில், தொடர்ந்து தீபாவளி சீட்டு கட்டி பணம் இழந்தவர்கள் அண்ணன் தலைமறைவாகவே தம்பியிடம் நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். இதனால், அவர் மன அழுத்ததுடன் இருந்துள்ளார். இந்நிலையில், செந்தில்நாதன் நேற்று முன்தினம் இரவு சிலாவட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட கே.கே. நகர் பகுதியில் வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டில் இருந்த மற்றவர்கள் காலையில் பார்க்கும்போது அவர் இறந்த நிலையில் தூக்கில் தொங்கியுள்ளார். இது குறித்து உறவினர்கள் மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags : Pudumappillai ,suicide ,Madurantakam ,Deepavali , Deepavali ticket, asking for money, harassment, newcomer, hanging and suicide
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை