×

இடைக்கழிநாடு பேரூராட்சியில் தூர்ந்து போகும் குளங்களால் விவசாயிகள் வேதனை

செய்யூர்: செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சியில் ஆங்கிலேயர் காலத்தில் விவசாயத்திற்காக உருவாக்கப்பட்ட வாஞ்சிகள் அனைத்தும் தூர்ந்துபோய் உள்ளதால், விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனைப் படுகின்றனர்.
செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சி உள்ளது. இங்கு, 24 வார்டுகளில் உள்ள பெரும்பாலானோர் மீனவர்கள் மற்றும் விவசாயிகள். பேரூராட்சி பகுதி அனைத்தும் கடல் சார்ந்த பகுதிகள் என்பதால், இங்குள்ள விவசாயிகள் விவசாயம் செய்வதில் பெரும் சிரமம் இருந்து வந்தது.

தனை போக்கும் வகையில் ஆங்கிலேயர் காலத்தில் பேரூராட்சியின் பல பகுதியில் மழைநீர் தேக்கத்திற்காக 75 வாஞ்சிகள் (ஊரணி அல்லது குளங்கள்) உருவாக்கப்பட்டன. இந்த நீர்ப்பிடிப்பு பகுதியில் நீர் மோட்டார்களை அமைத்து அதன்மூலம் விவசாயிகள் பல ஏக்கர் பரப்பில் நெல் பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வந்தனர். தற்போது, இந்த வாஞ்சிகள் பேரூராட்சி நிர்வாகத்தினால் முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால், இங்குள்ள அனைத்து வாஞ்சிகளும் தூர்ந்துபோய் சிறுசிறு கழிவுநீர் குட்டை போல் மாறியுள்ளது. இந்நீரால், விவசாயம் செய்ய முடியாது என நினைத்த விவசாயிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்வதையே தவிர்த்து வந்தனர். நீண்டகாலமாக விவசாயம் செய்யப்படாததால் விவசாயிகளின் நிலங்கள் தற்போது கரம்பாக மாறிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘எங்கள் பகுதி வானம் பார்த்த பூமி என்பதால் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த வாஞ்சிகள் மூலம் 3 போகம் வரை பயிர் செய்து வந்தோம். ஆனால், இன்றோ நாங்கள் அமைத்த மோட்டார்கள் மட்டுமே இருக்கும் நிலையில் வாஞ்சிகளை காணோம். அனைத்தும் தூர்ந்துபோய் மண்மேடாக காட்சி அளிக்கிறது. பேரூராட்சி நிர்வாகத்திடம் வாஞ்சிகளை மறுபுனரமைப்பு செய்து தர வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால், நடவடிக்கை இல்லை. இதனால் இனி விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தங்களின் விவசாயத்தை தொடரும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

* தடுப்பு பகுதிகளையும் பராமரிக்கவில்லை
கடந்த ஆங்கிலேயர் காலத்தில் கடும் மழையின்போது கடல் நீர் விவசாய நிலங்களில் வந்து சேராத வகையில் நீல தடுப்புகள் அமைத்து கொடுத்தனர். அந்த தடுப்பு பகுதிகளை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால் கடல் நீர் விவசாய நிலங்களை வந்தடைந்து பயிர்கள் அழிக்க செய்கிறது. இதனால், விவசாயம் செய்யவே விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

* வாஞ்சிகளை ஆக்கிரமித்துள்ள சமூகவிரோதிகள்
வாஞ்சிகள் அனைத்தும் தூர்ந்துபோய் விவசாயம் இல்லாத பல இடங்களை அதே பகுதியில் வசிக்கும் தனிநபர்கள் வாஞ்சிகளை மண் போட்டு நிரவி அந்நிலங்களை வெளி நபர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதுபோன்ற ஆக்கிரமிப்பு கண்டறிந்து அந்நிலங்களை மீட்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Interstate Municipality , Interstate municipality, dredging, pond, farmers suffering
× RELATED இடைக்கழிநாடு பேரூராட்சியில்...