×

ஊரடங்கு காலத்திலும் தொடரும் கொலைகள் ரவுடிகளின் சாம்ராஜ்யத்திற்கு மீண்டும் செல்கிறதா வியாசர்பாடி: பொதுமக்கள் வியாபாரிகள் அச்சம்

பெரம்பூர்: புளியந்தோப்பு காவல் சரகத்தில் ஊரடங்கு காலக்கட்டத்திலும் தொடரும் கொலைகளால் வியாபாரிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே, ரவுடிகளின் சாம்ராஜ்யத்திற்கு மீண்டும் செல்கிறதா வியாசர்பாடி என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் ரவுடிகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி வடசென்னை. இங்கு பல ரவுடிகள் குழுக்களாக செயல்பட்டு வந்தனர். தற்பொழுது ஒரு சிலர் சிறையிலும் மற்றொரு தரப்பினர் ரவுடி வாழ்க்கையில் இருந்து ஒதுங்கி வேறு பாதையிலும் சென்று கொண்டிருக்கின்றனர். வேறு சிலர் எதிர் கோஷ்டியினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

இருந்தபோதும் தொடர்ந்து ஒரு சில ரவுடிக் கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் வடசென்னையில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், வடசென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட வியாசர்பாடி பகுதியில் நாகேந்திரன் என்ற ரவுடி பிரபலமானவர். இவர், ஸ்டான்லி சண்முகம் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று தற்போது சிறையில் உள்ளார். சிறையில் இருந்தவாறே பல்வேறு குற்றச் செயல்களை செய்து வருகிறார் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

அந்த வகையில், வியாசர்பாடி பி.வி காலனியை சேர்ந்த அப்பு சில காலம் வடசென்னை பகுதியை ஆட்டிப்படைத்து உடல்நலக்குறைவு காரணமாக அவரும் இறந்துவிட்டார். வெள்ளை ரவி எனும் ரவுடி என்கவுன்டரில் கொல்லப்பட்டார். காது குத்து ரவி, சேரா, சோமு, கரிமேடு அன்பு ஆகியோர் ஒதுங்கிக் கொண்டனர். இதைதொடர்ந்து, இடிமுரசு இளங்கோ எனும் ரவுடி மற்றொரு ரவுடி கும்பலால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர், பப்லு என்னும் ரவுடியை ஆந்திராவில் வைத்து எதிர்தரப்பினர் தீர்த்துக் கட்டினர். பொக்கை ரவி மருத்துவமனையில் ரவுடிகளால் தீர்த்துக்கட்டப்பட்டார்.

தற்போது பாடி சரவணன், சூழ்ச்சி சுரேஷ், பழனி உள்ளிட்டோர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு புளியந்தோப்பு சரகத்தில்  ரவுடிகளின் அராஜகம் அன்று முதல் இன்று வரை தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஓராண்டு காலமாக ஓரளவிற்கு குறைந்திருந்த கொலைகள் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது அதிலும், கடந்த 3 மாதமாக ஊரடங்கு காலத்தில் வியாசர்பாடி, எம்கேபி நகர், கொடுங்கையூர் ஆகிய பகுதிகளில் 4 கொலைகள் நடந்துள்ளன. கடந்த ஜூலை 6ம் தேதி வியாசர்பாடியில் பிரசாந்த் என்ற கல்லூரி மாணவனை மூன்று பேர் கொண்ட கும்பல் வெட்டி சாய்த்தது.

அதன்பின்பு ஆகஸ்ட் 6ம் தேதி கொடுங்கையூர் மல்லிப்பூ காலனியில் தாமோதரன் என்கிற செல்லக் குஞ்சு எனும் ரவுடி 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். ஆகஸ்ட் 19ம் தேதி வியாசர்பாடியில் விஜய் தாஸ் என்ற ரவுடியை 8 பேர் கொண்ட கும்பல் வெட்டி சாய்த்தது. கஞ்சா வியாபாரம் மற்றும் மாமூல் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்தது. இதேபோன்று, நேற்று முன்தினம் தோல் ராஜி எனும் ரவுடி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை முன்விரோதம் காரணமாக வெட்டினார்.

இதில் ராஜி என்கிற ராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 6 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுமட்டுமின்றி, கடந்த 18ம் தேதி எம்கேபி நகரில் ராஜேந்திரன் என்பவரை வெட்டி ஒரு கும்பல் பணத்தை பறித்தது. ஜூலை 30ம் தேதி புளியந்தோப்பு சாஸ்திரி நகர் பகுதியில் சீனிவாசன் என்பவரை வெட்டிய 4 பேர் கொண்ட கும்பல் கைதானது.  ஜூலை 24ம் தேதி கொடுங்கையூர் பகுதியில் அண்ணன், தம்பி என இருவரும் மூன்று பேர் கொண்ட கும்பலால் வெட்டப்பட்டனர். ஏப்ரல் 30ம் தேதி கொடுங்கையூர் எருக்கஞ்சேரி பகுதியில் தந்தை, மகன் ஆகிய  இருவரையும் கஞ்சா போதையில் வந்த இளைஞர்கள் சுமார் 10க்கும் மேற்பட்டோர் வெட்டினர்.

இப்படி தொடர்ந்து ரவுடிகள் பொதுமக்கள் மீதும், வியாபாரிகள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சென்னையில் குற்ற செயல்கள் அதிகம் நடைபெறும் காவல் மாவட்டங்களில் புளியந்தோப்பு காவல் மாவட்டமும் ஒன்று. இந்த மாவட்டத்தின் கீழ் வரும் வியாசர்பாடி, எம்கேபி நகர், கொடுங்கையூர், புளியந்தோப்பு, பேசின் பிரிட்ஜ், ஓட்டேரி ஆகிய காவல் நிலையங்களில் அதிகமான குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் வசித்து வருகின்றனர். எனவே, இந்த காவல் நிலையங்களுக்கு போதிய காவலர்களை நியமிக்க வேண்டும் என பல்வேறு சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால், இதுவரை அவர்களுடைய கோரிக்கை நிறைவேறவில்லை.

வியாசர்பாடி பகுதியில் கடந்த 19ம் தேதி விஜய் தாஸ் எனும் ரவுடியை கொலை செய்த வழக்கில் கொலை செய்தவர்கள் அவர்களாகவே ஷேர் ஆட்டோவில் காவல் நிலையத்திற்கு வந்து, நாங்கள் தான் கொலை செய்தோம் என்று கூலாக உள்ளே சென்று அமர்ந்தனர். அவர்களை தொட்டுக் கூட பார்க்காமல், காவல்  துறையினரும் அப்படியே ரிமாண்ட் செய்து அனுப்பி வைத்தனர். தற்போது பாத்ரூமில் வழுக்கி விழும் சம்பவங்கள் வெகுவாக குறைந்துவிட்டன. சாத்தான்குளம் சம்பவத்திற்குப் பிறகு எந்த ஒரு போலீசாரும் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என வெளிப்படையாகவே தெரிவிக்கின்றனர்.

இதனால் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் இந்த காலக்கட்டத்தில் கூட வியாசர்பாடி, எம்கேபி நகர், கொடுங்கையூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து நடந்த நான்கு கொலைகளால் அப்பகுதி மக்களும் வியாபாரிகளும் அச்சமடைந்துள்ளனர். எனவே காவல்துறையினர் இந்த விவகாரத்தில் மேலும் விழிப்புடன் செயல்பட்டு பழைய குற்றவாளிகளை கண்காணித்து அவர்கள் குற்ற செயலில் ஈடுபட்டால் உடனடியாக கைது செய்ய வேண்டும் என தெரிவிக்கின்றனர். அப்படியில்லை என்றால், வியாசர்பாடி, எம்கேபி நகர் போன்ற பகுதிகள் மீண்டும் ரவுடிகளின் சாம்ராஜ்யத்துக்கு போய்விடும் என அப்பகுதி வியாபாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

* நோ ரிஸ்க்...
சாத்தான்குளம் சம்பவத்துக்கு பிறகு போலீசார் பெரிய அளவில்  குற்றவாளிகளை அடிப்பது கிடையாது. இதனால் குற்றவாளிகள் கொலை செய்துவிட்டு தாங்களாகவே காவல்நிலையத்தில் வந்து சரண்டர் ஆகும் கூத்துகளும் நிகழ்ந்து வருகின்றன.

* போலீஸ் பற்றாக்குறை
புளியந்தோப்பு சரகத்தில் 645 காவலர்கள் வேலை செய்யவேண்டிய நிலையில் தற்போது 420க்கும் குறைவாகவே போலீசார் வேலை செய்து வருகின்றனர். இதனால் குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்க முடியாத நிலை உள்ளது. மேலும், ரோந்து வாகனங்களில் குறிப்பிட்ட போலீசாரை அனுப்ப முடியவில்லை என அந்தந்த காவல் ஆய்வாளர்களே குமுறுகின்றனர்.


Tags : killings ,traders ,Vyasarpadi ,curfew , Fear of curfew, continuing killings, rowdy, Vyasarpadi, public, traders
× RELATED வியாசர்பாடி சர்மா நகரில் டாஸ்மாக் கடையில் DVR கருவி திருட்டு..!!