என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடியின் உடலை 2 நாட்களாக வாங்க மறுக்கும் உறவினர்கள்

பெரம்பூர்: அயனாவரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சங்கர் (எ) இளநீர் சங்கர் (48) என்பவரை, அயனாவரம் போலீசார் கடந்த 21ம் தேதி அதிகாலை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், சங்கரின் தாயார் கோவிந்தம்மாள் மற்றும் சகோதரி ரேணுகா ஆகியோர், சங்கரின் மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், அவரை சுட்டுக்கொன்ற இன்ஸ்பெக்டர் நடராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். மேலும் இது தொடர்பாக எழும்பூர் பெருநகர குற்றவியல் 5வது நீதிமன்ற நீதிபதி சிவசக்திவேல் கண்ணனிடம் புகார் அளித்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை பிரேத பரிசோதனை முடிந்ததும் ரவுடி சங்கரின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்தனர். ஆனால், உடலை வாங்க உறவினர்கள் யாரும் மருத்துவமனைக்கு வரவில்லை. ஏற்கனவே சங்கரின் மரணத்துக்கு நியாயம் கிடைக்கும் வரை உடலை வாங்கமாட்டோம் என்று அவரது சகோதரி ரேணுகா தெரிவித்திருந்தார். போலீசார் அயனாவரத்தில் உள்ள சங்கரின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டப்பட்டு இருப்பது தெரிந்தது. நேற்று வரை உறவினர்கள் வராததால், 2வது நாளாக சங்கரின் உடல் சவக்கிடங்கிலேயே வைக்கப்பட்டுள்ளது. அவரின் உறவினர்களை தேடி, அவர்களிடம் உடலை ஒப்படைக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: