திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பவித்ர உற்சவம் நடத்துவதில் சிக்கல்: பக்தர்கள் அதிர்ச்சி

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பவித்ர உற்சவம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு இருப்பது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பவித்ர உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு பவித்ர உற்சவம் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி நடக்கிறது. 7 நாட்கள் நடக்கும் இந்த உற்சவத்தில் ஒவ்வொரு நாட்களும் சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்கள் நடைபெறும். இந்த நிலையில் நடப்பாண்டில் பவித்ர உற்சவத்துக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயிலில் கடந்த 2016ல் உதவி ஆணையராக ஜோதிலட்சுமி நியமிக்கப்பட்டிருந்தார். அவர் கடந்த 4 ஆண்டுகளாக இந்த பதவியில் இருந்த நிலையில் அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்ததால், திடீரென பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவர் உதவி ஆணையர் பொறுப்பில் இருந்து செல்லும் போது, கோயில் நகைகள், சொத்துக்கள் மற்றும் உண்டியல் பணம் தொடர்பாக ஆய்வு செய்து ஒப்படைக்க வேண்டும். அதன்பிறகே அந்த பொறுப்பில் இருந்து சென்று இருக்க வேண்டும். ஆனால், அவர் நகைகள் தொடர்பான ஆவணங்களை மட்டும் புதிதாக பொறுப்பேற்ற அதிகாரியிடம் ஒப்படைத்தார். ஆனால், நகைகள் அந்த ஆவணங்களில் உள்ளது போன்று இருக்கிறதா என்பது தொடர்பாக ஆய்வு செய்யவில்லை. இதனால், புதிதாக பொறுப்பேற்ற அதிகாரி நகை பெட்டக அறை திறக்கவில்லை.

இந்நிலையில், பவித்ர உற்சவம் 27ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 108 வெள்ளி கலசம் மற்றும் சுவாமி அலங்காரம் செய்ய நகைகள் அனைத்தையும், நகை பாதுகாப்பு பெட்டக அறையை திறந்து எடுத்து தர வேண்டும். ஆனால், பழைய உதவி ஆணையர் ஆய்வு செய்து ஒப்படைக்காத நிலையில், கோயிலில் நகைகள் காணாமல் போய் இருந்தால் சிக்கலில் மாட்டிக்கொள்வோம் என்கிற பயத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிகாரி நகை பெட்டகத்தை திறக்க மறுத்து விட்டார்.

இந்த நிலையில் உதவி ஆணையராக இருந்த ஜோதி லட்சுமி முன்னிலையில் நகை பெட்டக அறையை திறப்பது தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஆனால், அவர் வர மறுத்து விட்டதாக தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார். இதன்காரணமாக பவித்ர உற்சவம் நடைபெறுமா என்ற கேள்வி பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Related Stories:

>