×

முழு ஊரடங்கு நேரத்தில் விதிகளை மீறி ஜாலியாக பைக்கில் சுற்றியவர்களை வளைத்து பிடித்து கொரோனா பரிசோதனை: ஆள் பிடிக்கும் மாநகராட்சி களப்பணியாளர்கள்

சென்னை: முழு ஊரடங்கு நேரத்தில் விதிகளை மீறி சாலையில் சுற்றியவர்களை பிடித்து மாநகராட்சி களப்பணியாளர்கள் கொரோனா பரிசோதனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே உள்ளது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் சென்னையில் தினசரி 900 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஆனால் தற்போது தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.

தற்போது வரை சென்னையில் 1,24,071 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1,08,545 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 2564 பேர் மரணம் அடைந்துள்ளனர். 12,962 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக அம்பத்தூர், அண்ணா நகர், கேடம்பாக்கம், வளசரவாக்கம், அடையாறு உள்ளிட்ட மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கு நேரத்தில் சாலையில் சுற்றிதிரிந்தவர்களை பிடித்து கட்டாயப்படுத்தி மாநகராட்சி களப்பணியாளர்கள் கொரோனா பரிசோதனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஜூலை மாதம் முதல் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி நேற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நேரத்தில் விதிகளை மீறி வாகனங்களில் வெளியே வருபவர்கள் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிப்பார்கள். ஆனால் தற்போது விதிகளை மீறி வெளியே வருபவர்களுக்கு கட்டாயப்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நேற்று காலை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள தனியார் ஏடிஎம் முன்பு மாநகராட்சி சார்பில் காய்ச்சல் முகாம் நடைபெற்றுவந்தது. அங்கு 20க்கும் மேற்பட்ட மாநகராட்சி களப்பணியாளர்கள் சாலையில் இரு புறங்களிலும் நின்று கொண்டு இருந்தனர். இதனைத் தொடர்ந்து அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை களப்பணியாளர்கள் தடுத்து நிறுத்தினர். அவரிடம் வெளியே வந்ததற்கான காரணத்தை கேட்டுவிட்டு, முழு ஊரடங்கு காலத்தில் விதிகளை மீறி வெளியே சுற்றித் திரிந்த காரணத்திற்காக அபராதம் விதித்தனர்.

இதனைத் தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவரிடம் கூறினர். அவர் மறுப்பு தெரிவிக்க, கட்டாயப்படுத்தி கொரோனா பரிசோதனை எடுக்க வைத்தனர். இதைப்போன்று இரண்டு இளைஞர்கள் ஒரு இருசக்கர வாகனத்தில் அந்த வழியாக வந்தனர். அவர்களை மறித்த மாநகராட்சி களப்பணியாளர்கள் விதிகளை மீறி வெளியே வந்த காரணத்திற்காக அவர்களுக்கு அபராதம் விதித்தனர். இவர்களிடமும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறினர். அந்த இளைஞர்கள் கட்டாயப்படுத்தி கொரோனா சோதனை செய்ய சளி மாதிரிகளை அளிக்க வைத்தனர்.


Tags : Corona Experiment: Manipulative Corporation Fieldworkers ,corporations ,Corona Experiment: Field , Full curfew, fun out of bounds, cyclist, corona experiment, man-made corporation, fieldworkers
× RELATED வாடிப்பட்டியில் நீர்மோர் பந்தல் திறப்பு