×

செங்கல் உற்பத்தி பாதிப்பு: நாமக்கல்லில் கட்டுமான தொழில்கள் முடக்கம்: பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழப்பு

நாமக்கல்: நாமக்கல்லில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டு, கட்டுமான தொழில்கள் முடங்கியதால், பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, கடந்த மார்ச் இறுதிவாரத்தில் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், நாமக்கல் மாவட்டத்தில் கட்டுமான தொழில்கள் பாதிக்கப்பட்டு, பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். நாமக்கல்லில் எருமப்பட்டி, வடுகப்பட்டி, முத்துகாப்பட்டி, சேந்தமங்கலம், பெரியசாமி கோயில் பகுதிகளில் ஏராளமான செங்கல் சூளைகள் உள்ளன. பஸ் போக்குவரத்து இல்லாததால், தொழிலாளர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்து வேலைக்கு செல்ல முடியாமல் உள்ளனர்.

மேலும், டூவீலர்களில் 3 பேர், 4 பேர் என செல்லும்போது போலீசாரின் சோதனையில் சிக்கி தவிக்கின்றனர். இதனால் சூளைகளில் செங்கல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செங்கல் சூளை உரிமையாளர்கள் கூறுகையில், ‘கொரோனா ஊரடங்கில் அரசு தளர்வுகள் வழங்கினாலும், கட்டுமான தொழில்கள் அதிகளவு நடைபெறவில்லை. இதனால் செங்கல் சூளைகளில், உற்பத்தியான குறைந்த அளவு செங்கல் கூட விற்பனையாகாமல், மாதக்கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டு, கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது,’ என்றனர். கட்டுமான தொழிலாளர்கள் கூறுகையில், ‘ஊரடங்கால் கட்டுமான தொழில்கள் அடியோடு முடங்கி விட்டன.

கட்டுமான பொருட்களின் உற்பத்தியும் குறைந்து, விலை அதிகரித்து விட்டது. இதனால் புதிய கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் உள்ளது. தினமும் வேலை கிடைப்பதில்லை. போலீஸ் கெடுபிடி அதிகமிருப்பதால், வேலை கிடைத்தாலும்  செல்ல முடியவில்லை.’ என்றனர். இதுகுறித்து சிவில் இன்ஜினியர்கள் கூறுகையில், ‘பொதுமக்களிடம் பணப்புழக்கம் குறைந்துவிட்டது. பெரிய, பெரிய கட்டுமான நிறுவனங்களுக்கு கூட, போதுமான அளவு தொழிலாளர்களை அழைத்துவர முடியவில்லை. வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவாக தான் இருக்கிறது. இதனால் புதிய கட்டுமான பணிகள் இன்னும் 2 மாதத்துக்கு பிறகுதான் தொடங்க முடியும்,’ என்றனர்.

Tags : Namakkal , Brick, Namakkal, workers, job loss
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை