×

சாயல்குடி கடற்கரை கிராமங்களில் பட்டுப்போன சவுக்கு மரங்களால் மண் அரிப்பு அபாயம்: பாதுகாக்க கோரிக்கை

சாயல்குடி:  சாயல்குடி பகுதி கடற்கரை கிராமங்களில் பட்டுப்போன சவுக்கு மரங்களால் மண் அரிப்பு, கடல் அலை உள்ளே புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாயல்குடி அருகே ரோச்மா நகர், நரிப்பையூர், மேலமுந்தல், கீழமுந்தல், மூக்கையூர், வாலகிநோக்கம், மாரியூர், காந்திநகர், ஒப்பிலான் உள்பட 20க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் மண் அரிமானத்தை தடுத்தல், கடல் அலை தடுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக அரசிற்கு வருமானம் தரக்கூடியதாக சவுக்கு, நாட்டு கருவேலம் உள்ளிட்ட மரங்கள் வளர்க்கப்பட்டு வந்தது. தற்போது 100க்கும் மேற்பட்ட மரங்கள் கருகிபோய் கிடக்கிறது. சில மரங்கள் வேரோடு சாய்ந்து கிடக்கிறது.

இதனால் மரங்களின்றி மண் அரிமானம் ஏற்படும் நிலை உள்ளது. இயற்கை பேரிடர் காலங்களில் கடல் அலைகள் கிராமத்திற்குள் புகும் அபாயம் உள்ளது.  பட்டுப்போன மரங்களை சமூகவிரோத கும்பல் விற்பனை செய்வதற்காக வெட்டி கடத்தி வருகிறது. இதனால் அரசிற்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டு வருகிறது. மேலும் கடற்கரை ஓரங்கள், சாலையோரங்களில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் மீனவர்கள் வலை உலர்த்துதல், வலையை சரிசெய்தல், மீன்களை ஏலமிடுதல், மீன்களை காய போடுதல் போன்ற பணிகளை செய்ய முடியவில்லை. அதிகாலை, இரவு நேரங்களில் கடலுக்கு வந்து செல்லும்போது முள்செடிகள் பாதங்களை பதம் பார்க்கின்றன.

சாலையில் செல்லும் வாகனஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே கடற்கரை ஓரங்களில் இடையூறாக உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவதுடன், அரசிற்கு வருமானம் அளிக்கக்கூடியதும், மண் அரிமானத்தை தடுக்க உதவும் சவுக்கு, நாட்டு கருவேல மரங்களை நட்டு பராமரிக்க வனத்துறையினர், மன்னார் வளைகுடா உயிர்கோள பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : villages ,soil erosion ,Sayalgudi , Sayalgudi beach, whip trees, soil erosion
× RELATED திருப்பத்தூரில் 14 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு