×

திருப்பத்தூர் அருகே ஜவ்வாது மலை அடிவாரத்தில் 3,500 ஆண்டுகள் பழமையான கற்திட்டை கண்டுபிடிப்பு

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் அருகே ஜவ்வாதுமலை அடிவாரத்தில் 3,500 ஆண்டுகள் பழமையான கற்திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பழங்கால கல்வெட்டுகள் அதிக அளவில் கண்டு பிடிக்கப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் ஆ.பிரபு, முனைவர் சு.சிவசந்திரகுமார், தொல்லியல் ஆய்வாளர் முனைவர் சேகர், ஆய்வு மாணவர்கள் சந்தோஷ், தரணிதரன் ஆகியோர் திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர் அருகில் உள்ள ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள பெருமாள் கோயில் பகுதியில் தொல்லியல் மேற்பரப்புக் கள ஆய்வினை மேற்கொண்டனர்.

அப்போது பழங்கால நடுகற்கள், கற்கோடாரிகள், 3,500 ஆண்டுகள் பழமையான கற்திட்டைகள் போன்றவற்றை கண்டு பிடித்தனர். இதுகுறித்து முனைவர் ஆ.பிரபு கூறியதாவது:இப்பகுதியில் ஆடு மேய்ப்பவர்களிடம் தகவல்கள் சேகரித்தபோது, பாண்டவர்குட்டை என்ற இடம் குறித்த தகவல் பெறப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கு சென்று ஆய்வு செய்தபோது 10க்கும் மேற்பட்ட கற்திட்டைகள்  இருப்பது தெரியவந்தது. அந்த இடமானது சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது. சுற்றிலும் கற்குவியலாகக் காட்சியளிக்கும் அந்த இடத்தில் முற்கால மனிதர்கள் ஈமச்சின்னங்களை ஏற்படுத்தியுள்ளனர்.

அவற்றில் 6 கற்திட்டைகள் நல்லநிலையில் காணப்படுகின்றன. ஒவ்வொரு கற்திட்டையும் சிறுசிறு கற்களை அடுக்காக அடுக்கி அதன் மீது பலகைக்கற்களை வைத்து ஏற்படுத்தியுள்ளனர். பலகைக்கல்லானது 1½ அடி தடிமன் கொண்டதாகவும், 3X4 மீட்டர் சுற்றளவு கொண்டதாகவும் காணப்படுகின்றன. மேற்கூரையாக உள்ள பலகைக் கல்லின் எடை 2 முதல் 3 டன் கொண்டதாக இருக்கக்கூடும். இவ்வளவு கடினமான எடையுள்ள கற்களை எவ்வாறு நகர்த்தி சிறு சிறு கற்களைக் கொண்ட அடுக்களின் மீது அன்றைக்கு வைத்தனர் என்பது வியப்பாக உள்ளது. இங்குள்ள கற்திட்டைகளில் ஒன்று மட்டும் அளவில் பெரியதாக உள்ளது.

தவிர இக்கற்திட்டைக்குச் செல்வதற்காக படிக்கட்டு போன்ற வளைந்த பாதையினை கற்களைக் கொண்டு அழகாக ஏற்படுத்தியுள்ளனர். மற்ற கற்திட்டைகளுக்கு இல்லாத சிறப்பாக இது உள்ளதால், இக்கற்திட்டை அக்கால மக்களின் குழுத்தலைவருக்காக ஏற்படுத்தப்பட்டதாக இருக்க வாய்ப்புள்ளது. அனைத்துக் கற்திட்டைகளும் கிழக்கு நோக்கிய வாசல்களைக் கொண்டுள்ளன. கற்திட்டைகள் இருக்கும் இடத்திற்கு 50மீட்டர் தொலைவில் ஒரு அழகான நீர்ச்சுனை ஒன்றும் உள்ளது. இச்சுனையினைச் சுற்றிலும் உருளைக் கற்களைக் கொண்டு கிணறு போல ஏற்படுத்தி சுனை நீரைப் பாதுகாத்துள்ளனர். இச்சுனை அக்கால மக்களின் நீர் ஆதாரமாக இருந்திருக்கும்.

இதனருகே செவ்வக வடிவில் கற்களைக் கொண்டு அடுக்கப்பட்ட ஓர் அமைப்பினையும் ஏற்படுத்தியுள்ளனர். இக்குன்றின் கீழ்ப்பகுதியில் ஏராளமான மண் ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. இவ்வூரில் ஏற்கனவே தொல்லியல் அறிஞர் முனைவர் கா.ராஜனால் வாழ்வியல் மேடும், கல் வட்டமும் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இக்கற்திட்டைகள் ஏறத்தாழ 3500 ஆண்டுகள் பழமையான நினைவுச்சின்னங்களாகும். ஆனால் இவைகளில் பல சேதப்படுத்தப்பட்டு அழிந்துவருகின்றன. மாவட்ட நிர்வாகமும்,  தொல்லியல்துறையும் இவ்விடத்தினை பராமரித்து பாதுகாத்திட வேண்டும்.

இதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜவ்வாதுமலை, ஏலகிரிமலைப் பகுதிகளில் உள்ள கல்வெட்டுகள், நடுகற்கள், கற்திட்டைகள், கற்கோடாரிகள் போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : foothills ,Tirupati ,Javadu Hills , Tirupati, Javadu Hill, Kartittai
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு...