×

சிவப்பு ஸ்டிக்கர் ஒட்டும் புதிய நடைமுறையால் தகுதிச்சான்று பெற முடியாமல் 5000 வாகனங்கள் நிறுத்தி வைப்பு

சேலம்: சிவப்பு ஸ்டிக்கர் ஒட்டும் புதிய நடைமுறை உத்தரவால், தமிழகம் முழுவதும் 5000 வாகனங்கள் தகுதிச்சான்று பெற முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பஸ், கார், வேன், ஆட்டோ உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்கள், லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்களை இயக்க வாகன தகுதிச்சான்று பெறுவதில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.   லாரிகள், கார், பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் தகுதிச்சான்று பெறுவதற்கு சிவப்பு ரிப்ளக்ஸ் ஸ்டிக்கரை வாகனம் முழுவதும் ஒட்டி வரவேண்டும் எனவும், அந்த ஸ்டிக்கரை அனுமதி அளிக்கப்பட்டுள்ள கம்பெனியில் வாங்க வேண்டும் என்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு லாரி உரிமையாளர்களை பெரிதும் அதிர்ச்சி அடைய செய்தது.

இது தொடர்பாக, லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து அனுமதி அளிக்கப்பட்ட கம்பெனியில் ஸ்டிக்கர் வாங்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து கடந்த 19ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் முடிந்த நிலையில், லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் தகுதிச்சான்று பெற, அனுமதி அளிக்கப்பட்ட கம்பெனியில் இருந்து ஸ்டிக்கர் வாங்கி ஒட்டினால்தான் சான்றுபெற முடியும். கொரோனா ஊரங்கால்  லாரி தொழில் முடங்கியுள்ள நிலையில், லாரி உரிமையாளர்களுக்கு இதனால் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.  

இது குறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் தனராஜ் கூறுகையில், ‘‘கொரோனா ஊரடங்கால் ஓடாத லாரிக்கு காலாண்டு வரியை செலுத்தி வருகிறோம். தற்போது, லாரி, கனரக வாகனங்கள் தகுதிசான்று பெறுவதற்கு புதிதாக ஒரு கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.
வாகனம் முழுவதும் சிவப்பு ரிப்ளக்ஸ் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் எனவும், அனுமதி வழங்கப்பட்டுள்ள கம்பெனியில் தான் வாங்கவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  இதனால் 5,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் தகுதிச்சான்று பெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லாரி உரிமையாளர்களுக்கு அரசு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இதனை திரும்பபெற வேண்டும்,’’ என்றார். 


Tags : Red sticker sticking, certification, 5000 vehicles
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...