×

தடையை மீறி வைக்கப்பட்ட விநாயகர் சிலை பறிமுதல் போலீசாரே நீரில் கரைத்தனர்: ஊர்வலம் சென்றவர்கள் கைது

சென்னை: தமிழகத்தில் பல இடங்களில் தடையை மீறி விநாயகர் ஊர்வலம் சென்றவர்கள் கைது செய்யப்பட்டனர். கோவை மாநகர், புறநகரில் தடையை மீறி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை போலீசார் பறிமுதல் செய்து நீர் நிலைகளில் கரைத்தனர். தமிழகம் முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. பொது இடங்களில் சிலைகள் வைக்க போலீசார் தடை விதித்திருந்தனர். இதை கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இந்து அமைப்பினர் ஒப்புக்கொள்ளவில்லை. சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி, பூசாரிபாளையம், கோவைப்புதூர், குனியமுத்தூர், சவுரிபாளையம், புலியகுளம், சிங்காநல்லூர், பீளமேடு உட்பட பல்வேறு பகுதிகளில் தடைைய மீறி 3 அடி முதல் 6 அடி வரையிலான விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்திருந்தனர்.

இவ்வாறு வைக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட சிலைகளை போலீசார் பறிமுதல் செய்து, முத்தண்ண குளம், சிங்காநல்லூர் குளம், குறிச்சி குளம் மற்றும் சரவணம்பட்டி குட்டையில் கரைத்தனர். கோவை புறநகரிலும் பல்வேறு இடங்களில் தடையை மீறி வைக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை போலீசார் பறிமுதல் செய்து நீர்நிலைகளில் கரைத்தனர். இதுதொடர்பாக போலீசாருக்கும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.  அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே குடைபாறைப்பட்டியில் நேற்று இந்து முன்னணி அமைப்பினர், விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

வருவாய்த்துறையினர் சிலையை கைப்பற்றி, திண்டுக்கல் கோட்டை குளத்திற்கு கொண்டு சென்று கரைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 6 பேரை கைது செய்தனர். மதுரை ஒத்தக்கடை பகுதியில் இந்து அமைப்பினர் சிலர், விநாயகர் சிலையை வேனில் ஏற்றி ஊர்வலமாக கொண்டு செல்ல முயன்றனர். போலீசார், வாகனத்தை வழிமறித்து சிலையை மீட்டனர். இதேபோல நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பல இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை போலீசாரும் வருவாய்த்துறையினரும் கைப்பற்றினர்.


Tags : rally ,protesters , Ganesha statue, police, procession, arrest
× RELATED மாவட்ட நீதிமன்றம் சார்பில் சமரசம் குறித்த விழிப்புணர்வு பேரணி