தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்

* வீடுகளில் சிலை வைத்து மக்கள் வழிபாடு

* ஊரடங்கால் பொது இடங்கள் களையிழப்பு

* சென்னையில் சிறிய சிலைகள் கடலில் கரைப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது. சிறிய கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வீடுகளில் சிலை வைத்து மக்கள் வழிபாடு நடத்தினர். கொரோனா ஊரடங்கால் பொதுஇடங்கள் களை இழந்து காணப்பட்டது. சென்னையில் சிறிய விநாயகர் சிலைகள் கடற்கரை பகுதிகளில் கரைக்கப்பட்டது. விநாயகர் அவதார திருநாளை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் பொதுஇடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபடுவது வழக்கம். அதன் பிறகு பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடற்கரை உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்தது. மேலும் வீடுகளில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும்படி அரசு சார்பில் ேவண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதையடுத்து பொதுமக்கள் நேற்று வீடுகளிலேயே விநாயகர் சிலைகளை வைத்து பூஜை நடத்தி வழிபட்டனர். இதனால், மாநிலம் முழுவதும் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி களைகட்டியிருந்தது. அதேபோல் ஆண்டுக்கு 10 ஆயிரத்துக்கும் குறைவாக வருவாய் உள்ள விநாயகர் கோயில் உள்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர். பல கோயில்களில் காலையிலேயே நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பல கோயில்களில் பக்தர்களுக்கு சுண்டல், சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், சாம்பார் சாதம், பொங்கல், கொழுக்கட்டை உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.பொதுமக்களும் தங்களுடைய வீடுகளில் விநாயகர் சிலைகளுக்கு அவல், பொரி, பழங்கள் படைத்தும் வழிபட்டனர். அதன் பின்னர், அவர்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு விநாயகர் சதுர்த்தி பலகாரங்களை வழங்கினர். ஒவ்வொரு ஆண்டும் பொதுஇடங்களில் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் 3 அடி முதல் அதிகப்பட்சம் 15 அடி உயர உள்ள விநாயகர் சிலைகளை பூஜைக்கு வைப்பது வழக்கம்.

ஆனால், பொது இடங்களில் எந்த விநாயகர் சிலைகளும் வைக்கப்படவில்லை. இதனால், சிலை வைக்கப்படும் இடங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. அதற்கு பதிலாக வீடுகளில் விநாயகர் சதுர்த்தி களைக்கட்டியதை காண முடிந்தது. சென்னையில் உள்ள மக்கள் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபட்ட பின்னர் மாலையில், அந்த சிலைகளை கொண்டு வந்து பட்டினப்பாக்கம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் நீரில் கரைத்தனர். வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட 3 அடி வரை உள்ள சிறிய சிலைகளை மட்டும் கரைக்க போலீசார் அனுமதி அளித்தனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

* கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்தது.

* ஒவ்வொரு ஆண்டும் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் 3 அடி முதல் அதிகபட்சம் 15 அடி உயரம் உள்ள விநாயகர் சிலைகளை பூஜைக்கு வைப்பது வழக்கம்.

Related Stories:

>