×

கொரோனாவால் கோட்டையிலிருந்து வெளியேறி முதல்முறையாக கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம்: சபாநாயகர் நேரில் ஆய்வு

சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக, சென்னை ஜார்ஜ் கோட்டையில் இருந்து வெளியேறி முதன்முறையாக தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சபாநாயகர் தனபால் நேற்று கலைவாணர் அரங்கத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். சட்டப்பேரவை விதியின்படி 6 மாதத்திற்கு ஒருமுறை சட்டப்பேரவை கூட்டம் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். வழக்கமாக பிப்ரவரி மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் மற்றும் மே, ஜூன் ஆகிய மாதங்களில் மானியக்கோரிக்கை விவாதம் நடத்தப்படும். பின்னர் 6 மாதங்களுக்கு பிறகு, ஜனவரியில் ஆளுநர் உரை நிகழ்த்துவார். எனவே கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுவதே இல்லை. இந்த ஆண்டு மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த மார்ச் 9ம்தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டதாலும், சட்டப்பேரவை கூட்டத்தை பிரதான எதிர்க்கட்சியான திமுக புறக்கணிப்பு செய்ததை தொடர்ந்தும் அவசர அவசரமாக சட்டப்பேரவை கூட்டம் கடந்த மார்ச் 24ம் தேதியுடன் முடிக்கப்பட்டது.
சட்டப்பேரவை கூட்டம் முடிந்த 6 மாதத்திற்குள் மீண்டும் சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பதால் வருகிற செப்டம்பர் 24ம் தேதிக்குள் சட்டப்பேரவை கூட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஆனாலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்போது தலைமை செயலக வளாகத்தில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் மண்டபம் மிகவும் சிறியதாகும். 234 சட்டப்பேரவை உறுப்பினர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி அங்கு அமர முடியாது. இதனால் தலைமை செயலக வளாகத்தை விட்டு வெளியில்தான் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. அதனால், தற்போதுள்ள இடத்துக்கு மாற்று ஏற்பாடாக வேறு இடங்களில் சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்தலாமா என்பது குறித்து சட்டப்பேரவை செயலக அதிகாரிகள் கடந்த ஒரு மாதமாக ஆலோசனை நடத்தி வந்தனர். அதன்படி, சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தை சென்னை, கலைவாணர் அரங்கம் அல்லது சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் நடத்தலாமா என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வந்தது. இதில், கலைவாணர் அரங்கத்தில் நடத்துவதுதான் சிறப்பாக இருக்கும் என்ற முடிவுக்கு சட்டப்பேரவை செயலக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்துக்கு நேற்று பகல் 11.30 மணிக்கு தமிழக சபாநாயகர் தனபால் நேரில் வந்து பார்வையிட்டார். அவருடன் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் சென்றனர். அங்குள்ள மண்டபத்தில் 234 எம்எல்ஏக்கள் மற்றும் ஐஏஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து கூட்டத்தை நடத்த முடியுமா என்பது குறித்து நேரில் பார்வையிட்டதுடன் அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தினார். அங்கு போதுமான இடவசதி உள்ளதால் கலைவாணர் அரங்கத்திலேயே வருகிற சட்டமன்ற கூட்டத்தை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர் பேட்டி அளித்த சபாநாயகர் தனபால், “சட்டப்பேரவை கூட்டம் கலைவாணர் அரங்கத்தில்தான் நடத்தப்படும் என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. முடிவு எடுத்த பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.

250 கார்கள் நிறுத்தும் வசதி
சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கம் 1.90 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு  ெகாண்டதாகும். இது தரைதளம் மற்றும் மூன்று மாடி கொண்ட கட்டிடமாகும். தமிழக அரசு விழா, சினிமா விழாக்கள் உள்ளிட்ட அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடும் விழாக்கள் இங்குதான் நடைபெறுகிறது. முதல் தளத்தில் உள்ள அரங்கத்தில் 1000 பேர் அமரக்கூடிய வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. அதேபோன்று இங்குள்ள 3வது மாடியில்தான் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த சபாநாயகர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 3வது மாடியில் உள்ள அரங்கத்தில் அதிகபட்சமாக 1000 பேர் வரை அமரும் வகையில் இடவசதி உள்ளது. அதனால் 234 எம்எல்ஏக்கள், சமூக இடைவெளியுடன் அமர முடியும். கலைவாணர் அரங்கத்தில் ஒரே நேரத்தில் சுமார் 250 கார்கள், 600 பைக் நிறுத்தும் வசதி உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகளும் நேற்று சபாநாயகருக்கு இதுபற்றி விளக்கி கூறி உள்ளனர். அரசு உத்தரவிட்டால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் சட்டப்பேரவை வளாகம் போன்று சபாநாயகர், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமரும் வகையில் ஏற்பாடு செய்யலாம் என்பது குறித்து நேற்றைய ஆலோசனையில் விவாதிக்கப்பட்டது.

Tags : time ,Assembly meeting ,Art Gallery ,castle ,Speaker ,inspection ,Corona ,fort ,Kalavanar Arena , Kalavanar Arena , first time , leaving , fort ,Corona, Speaker inspects
× RELATED 10 ஆண்டுகளில் முதல் முறையாக முன்னணி ஐடி...