×

மருத்துவமனையின் முட்டுக்கட்டையை மீறி ஜெர்மனிக்கு தனி விமானத்தில் தூக்கி செல்லப்பட்டார் நவல்னி: சைபீரியாவில் நள்ளிரவில் பரபரப்பு

மாஸ்கோ: ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவர் அலெக்சி நவல்னி. அதிபர் புடினின் அரசையும், அவரையும் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை சைபீரியாவில் இருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் பயணம் செய்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், விமானம் உடனடியாக கீழிறக்கப்பட்டது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர் கோமா நிலைக்கு சென்றார். விமான நிலையத்தில் அவர் குடித்த தேநீரில் விஷம் கலக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆளும் புடின் அரசுதான் இந்த சதிச் செயலைச் செய்ததாக நவல்னியின் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இந்நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்க ஜெர்மனி அரசு முன் வந்தது. சைபீரியாவுக்கு அது அவசரமாக மருந்துவ குழுவையும் அனுப்பியது. இவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு சைபீரியா வந்தனர். நேற்று காலை 8 மணியளவில் மருத்துவ வசதிகளுடன் கூடிய தனி விமானத்தில் அவரை ஜெர்மனிக்கு தூக்கிச் சென்றனர். முன்னதாக, நவல்னியை வெளிநாட்டுக்கு அனுப்ப முடியாது என்று மருத்துவமனை நிர்வாகம் பிடிவாதம் பிடித்தது. சிகிச்சைக்கான ஆவணங்களையும் தர மறுத்தது. பின்னர், அவரை ஜெர்மனி மருத்துவர்களிடம் ஒப்படைத்தது. இதனால், நள்ளிரவு முதல் காலை வரை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடல்நிலை முன்னேற்றம்: தனி விமானத்தில் ஜெர்மனிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நவல்னிக்கு, அங்குள்ள மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

Tags : Navalny ,Siberia ,Germany ,riot , Navalny taken, private plane, Germany ,hospital blockade,Midnight riots in Siberia
× RELATED ரஷ்ய அதிபர் தேர்தலில் புடின் மீண்டும்...