×

காந்தி மூக்கு கண்ணாடி ரூ.2.55 கோடிக்கு ஏலம்: இங்கிலாந்தில் சாதனைகள் முறியடிப்பு

லண்டன்:  இங்கிலாந்தின் ஹன்ஹமில் உள்ள ஈஸ்ட் பிரிஸ்டால் ஏல நிறுவனம், மகாத்மா காந்தியின் மூக்கு கண்ணாடி ஒன்றை ஆன்லைன் ஏலத்தில் விட்டது. பொதுவாக, காந்தியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக அமைந்திருப்பது அவரின் வட்ட வடிவ மூக்கு கண்ணாடி. சுதந்திர போராட்டத்தில் அனைத்து கால கட்டத்திலும் காந்தி மூக்கு கண்ணாடி அணிந்தபடியே இருந்துள்ளார். அவர், 1900ம் ஆண்டுகளின் ஆரம்பக் கட்டத்தில் தென் ஆப்ரிக்காவில் சட்டம் பயின்றார். அப்போதுதான், முதல் முறையாக காந்தி கண்ணாடி பயன்படுத்த தொடங்கினார். ஆரம்ப காலத்தில் அவர் பயன்படுத்திய தங்க முலாம் பூசப்பட்ட கண்ணாடி ஒன்றைத்தான் ஈஸ்ட் பிரிஸ்டால் நிறுவனம் ஏலத்தில் விட்டது. இந்த கண்ணாடி அதிகபட்சமாக ₹10 லட்சம் முதல் ₹15 லட்சம் வரை ஏலம் போகும் என ஏலதாரர் ஆன்டி ஸ்டோவ் மதிப்பிட்டு இருந்தார்.

ஆனால், கடந்த வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெற்ற ஆன்லைன் ஏலத்தில் காந்தியின் இந்த கண்ணாடி ₹2.55 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு, இங்கிலாந்தின் ஏல வரலாற்றில் உள்ள அனைத்து சாதனையையும் முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளது. இது குறித்து ஸ்டோவ் கூறுகையில், ‘‘நம்ப முடியாத பொருளுக்கு நம்ப முடியாத முடிவு! இந்த மூக்கு கண்ணாடி ஏல வரலாற்றுச் சாதனையில் மட்டுமல்ல, மிகச்சிறந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளை கண்டுபிடித்த பெருமையையும் எங்களுக்கு தந்திருக்கிறது. காந்தியின் மூக்கு கண்ணாடி எல்லா எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, ஏல நிறுவனத்தின் முந்தைய ஏலங்களையும் முறியடித்து விட்டது,’’ என்றார்.

பரிசாக கொடுத்தது
பொதுவாக, தனக்கு உதவி செய்தவர்களுக்கு தன்னிடம் உள்ள ஏதேனும் ஓர் பொருளை பரிசளிப்பதை பழக்கமாக கொண்டவர் மகாத்மா காந்தி. அந்த வகையில், 1900ம் ஆண்டுகளில் தென் ஆப்ரிக்காவில் இருந்தபோது அவர் ஆரம்ப காலத்தில் பயன்படுத்திய தங்க முலாம் பூசப்பட்ட இந்த மூக்கு கண்ணாடியை ஒருவருக்கு பரிசாக அளித்துள்ளார். அவரது குடும்பத்தினர்தான் கண்ணாடியை ஏலத்தில் விட்டுள்ளனர். இங்கிலாந்தின் குளோசெஸ்டர்சயரை சேர்ந்த மாங்கோட்ஸ்பீல்ட் பகுதியில் வசிக்கும் பெயர் வெளியிடாத அந்த முதியவர் கூறுகையில், ‘‘என்னுடைய மாமா தென் ஆப்ரிக்காவில் பிரிட்டிஷ் பெட்ரோலியத்தில் வேலை பார்த்தபோது அவருக்கு காந்தி தனது மூக்கு கண்ணாடியை பரிசளித்ததாக கூறி, அதை எனது தந்தையிடம் கொடுத்தார். இதற்கு இவ்வளவு தொகை கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. இந்த ஏலத்தொகையை எனது மகளுடன் பகிர்ந்து கொள்வேன்,’’ என்றார்.

தூக்கிப் போட சொன்னார்கள்
ஏலதாரர் ஆன்டி ஸ்டோவ் கூறுகையில், ‘‘காந்தியின் மூக்கு கண்ணாடியை ஏலத்துக்கு தரும்போது ‘50 ஆண்டாக பெட்டிக்குள் இருந்த மூக்கு கண்ணாடி ஏல விற்பனையில் தகுந்த விலை பெறாவிட்டால், தூக்கி போடுங்கள்’ என அதன் உரிமையாளர் கூறியிருந்தார். இதற்கு கிடைத்த விலை அவருக்கு நிச்சயம் தூக்கி வாரிப் போட்டிருக்கும்,’’ என்றார்.

Tags : UK ,Gandhi , Gandhi ,nose glass, auctioned,Rs 2.55 crore, Breakthrough in UK
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது