×

விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் காற்றின் ஈரப்பதத்தில் இருந்து தண்ணீர் எடுக்கும் புதிய கருவி: ஓசூர் பொறியியல் மாணவர் கண்டுபிடிப்பு

ஓசூர்: ஓசூரில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில், காற்றின் ஈரப்பதத்தில் இருந்து தண்ணீர் எடுக்கும் கருவியை பொறியியல் கல்லூரி மாணவர் கண்டு பிடித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள மூக்கண்ட பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். லேத் மிஷின் தொழிலாளி. இவரது மகன் கவுரிசங்கர் (21). தனியார் பொறியியல் கல்லூரியில் 4 ம் ஆண்டு மெக்கானிக்கல் படித்து வருகிறார். காற்றின் ஈரப்பதத்தில் இருந்து தண்ணீர் எடுக்கும் இயந்திரத்தை கண்டு பிடித்துள்ளார். இது குறித்து மாணவர் கவுரி சங்கர் கூறியதாவது: சில நேரங்களில் செடிகள் தண்ணீர் இல்லாமல் வாடுவதை கண்ேடன். காற்றில் ஈரப்பதம் அதிகம் இருக்கும் என படித்தது நினைவிற்கு வந்தது. காற்றில் உள்ள ஈரப்பதம் மூலம் தண்ணீர் எடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடிக்கும் எண்ணம் அப்போது எனக்கு தோன்றியது. இதை தொடர்ந்து சுமார் 2 வாரமாக புதிய கருவி தயாரிப்பு பணியில் ஈடுபட்டேன். மூன்று பிரிவுகளாக இதை வடிவமைத்து உள்ளேன்.
காற்றின் ஈரப்பதத்தை வடிகட்டி தண்ணீராக மாற்றுவது, செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து பொருட்களை தண்ணீருடன் சேர்ப்பது, இரண்டையும் ஒன்றாக குழாய்கள் மூலமாக வேர்களுக்கு கொண்டு சேர்ப்பது என மூன்று வகையில் அமைத்து உள்ளேன். மின்சார பிரச்னை இருந்தால் கூட சோலார் பேனல் மூலமாக இயங்கும் வகையில் அமைத்துள்ளேன்.

 இந்த கருவி 10 மணி நேரத்தில் 2 லிட்டர் தண்ணீர் சேமிக்கும் திறன் உள்ளது. ஒரு செடிக்கு ஒரு நாளைக்கு 50 மில்லி லிட்டர் தண்ணீர் இருந்தால் போதுமானது. ஒரு நாளைக்கு 10 செடிகள் வரை கூட தண்ணீர் பாய்ச்ச முடியும். விரைவில் 100 செடிகளுக்கு செலுத்தும் வகையில் இக்கருவியை மேம்படுத்த உள்ளேன். மேலும் வறட்சியான நிலங்களில், காற்றில் இருந்து தண்ணீர் தயாரித்து செடிகளின் வேர் பகுதிகளுக்கு செலுத்துவது, காடுகளில் விலங்குகளுக்கு தண்ணீர் எடுத்து தொட்டிகளில் சேமிப்பது, என இவை அனைத்தும் ₹2 ஆயிரம் செலவில் செய்ய உள்ளேன். காடுகளில் 50 ஆயிரம் ரூபாய் செலவில் 50 ஆயிரம் லிட்டர் வரை தண்ணீர் சேமிக்கும் பணிகளை செய்ய உள்ளேன். இதன் மூலம் யானைகளுக்கு கூட தண்ணீர் வழங்கி, ஊருக்குள் வருவதை தடுக்க முடியும். பகல் முழுவதும் சார்ஜ் செய்து, இரவு முழுவதும் தண்ணீர் சேமிக்க முடியும். இந்த இயந்திரத்தை எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று பொருத்த முடியும். அனைவரும் எளிய முறையில் பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Hosur , New tool ,water from,farmers, Hosur engineering student invention
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...