பள்ளிகள் மூடியதால் மாற்றுப்பணி தேடிய ‘மாஸ்டர்கள்’ கார் டிரைவரானார் கராத்தே மாஸ்டர்: சிலம்பம் சுற்றியவர், பண்டல் சுமக்கும் சோகம்

சிவகாசி: கொரோனா பாதிப்பால் சிவகாசியில் தனியார் பள்ளிகளில் பகுதிநேரமாக பணியாற்றி வந்த யோகா, கராத்தே மாஸ்டர்கள் வாழ்வாதாரம் தேடி லோடுமேன், கார் டிரைவிங் உள்ளிட்ட பணிக்கு சென்று வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மார்ச் 24ல் துவங்கப்பட்ட ஊரடங்கு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக கல்விக்கூடங்கள் அனைத்தும் பூட்டி கிடக்கின்றன. இதனால் பள்ளிகளில் தற்காலிகப் பணி ஆசிரியர்கள், பகுதி நேரமாக பணியாற்றும் கராத்தே, யோகா, சிலம்பம், டேக்வாண்டோ, கேரம் மாஸ்டர்கள் மற்றும் விளையாட்டு ஆசிரியர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு குறையும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பே இல்லை என தமிழக அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. இதனால் பள்ளி திறந்து விடும் என காத்திருந்த பகுதிநேர ஆசிரியர்கள் பலரும் மாற்றுப்பணிகளை செய்ய துவங்கி விட்டனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பல தனியார் பள்ளிகளில் யோகா சொல்லி கொடுத்த பூஜைத்துரை லோடுமேன் வேலைக்கும், சிலம்பம் சொல்லி கொடுத்த சக்தி ஈஸ்வரன் தீப்பெட்டி பண்டல் சுமக்கும் வேலைக்கும், கராத்தே சொல்லி கொடுத்த முருகன் கார் டிரைவராகவும், டேக்வாண்டோ சொல்லி கொடுத்த அன்பு எலக்ட்ரீஷியன் வேலைக்கும் சென்று தங்களது குடும்பத்தை காப்பாற்றி வருகின்றனர்.

கராத்தே மாஸ்டர் முருகன் கூறும்போது,  ‘‘ஒரு மாஸ்டராக, பகுதிநேர சம்பளத்திற்கு 5 முதல் 10 கல்வி நிலையங்களுக்கு பயிற்சி கொடுப்போம். கொரோனாவால் அனைத்து கல்வி நிலையங்களும் பூட்டப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரிகள் நிர்வாகம் சார்பாக எந்த மாஸ்டருக்கும் சம்பளம் கொடுக்கவில்லை. இதனால் குடும்பம் நடத்த சிரமமாக இருந்தது. பல நிறுவனங்களுக்கு சென்று வேலை கேட்டோம். இருக்கும் தொழிலாளர்களுக்கே வேலை கொடுக்க முடியவில்லை புதிதாக வேலைக்கு எடுப்பதில்லை என்று கூறிவிட்டனர். வேறுவழியின்றி, லோடுமென், கார் டிரைவிங், எலக்ட்ரீஷியன் போன்ற வேலைக்கு செல்கிறோம். விரைவில் பள்ளி, கல்லூரிகள் திறந்தால் மட்டுமே எங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்’’ என்றனர்.

Related Stories:

>