×

அறிவிப்பு வெளியிட்டு ஆய்வு செய்ததோடு சரி பக்கிங்காம் கால்வாயில் மீன்பிடி துறைமுகம் அமைப்பது எப்போது? மீனவர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மரக்காணம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் அழகன்குப்பம், வசவன்குப்பம், கைப்பாணிகுப்பம், எக்கியர்குப்பம், மண்டவாய் புதுக்குப்பம், பனிச்சமேடு குப்பம், அனுமந்தை குப்பம், செட்டி நகர் குப்பம், நொச்சிக்குப்பம், கூனிமேடு குப்பம் உள்பட 19 மீனவர் கிராமங்கள் உள்ளன. இங்கு 20 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் வசிக்கின்றனர். இதில் 1013 மீனவர்கள் பைபர் போட் படகுகளையும், 50 மீனவர் குழுக்கள் விசைப்படகுகளையும், 60 மீனவர் குழுக்கள் அதிநவீன விசைப்படகுகளையும் மற்ற மீனவர்கள் கட்டுமரங்களை பயன்படுத்தியும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். ஆனால் இப்பகுதியில் படகுகளை நிறுத்துவதற்கு மீன்பிடி துறைமுகம் இல்லை. இதனால் இங்குள்ள மீனவர்கள் அவர்களது படகுகளை கடற்கரை ஓரமே நிறுத்தி வைத்துள்ளனர்.     

 இதுபோல் கடற்கரை ஓரம் பாதுகாப்பு இல்லாமல் விசைப்படகுகளை நிறுத்தி வைப்பதால் கனமழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் போது படகுகள், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் கடலில் இழுத்துச் செல்லப்படுவதால் மீனவர்கள் ஆண்டு தோறும் பாதிக்கும் நிலை உள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் சார்பில் அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து இருந்தனர். இந்நிலையில் மரக்காணம்  அழகன்குப்பம் பகுதி பக்கிங்காம் கால்வாயில் ரூ. 139 கோடி மதிப்பில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என்று கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் மரக்காணம் பகுதியில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் ரூ.218 கோடி மதிப்பில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு மீன்பிடி துறைமுகம் அமைய உள்ள இடத்தை மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆனால் இதுவரையில் இப்பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ஆட்சிக்காலம் முடிய சில மாதங்களே உள்ள நிலையில் இப்பகுதியில் துறைமுகம் அமைக்கும் பணியை கிடப்பில் போடாமல் அரசு உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : fishing port ,Fishermen ,Buckingham Canal , Notice issued, inspection, Buckingham Canal, fishing harbor, when? , Fishermen, public expectation
× RELATED இலங்கை சிறையிலிருந்து...