×

காவேரிப்பட்டணம் அருகே 1,200 ஆண்டு பழமையான விநாயகர் சிலை: அருங்காட்சியக காப்பாட்சியர் தகவல்

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே கண்டறியப்பட்டுள்ள 1,200 ஆண்டுகள் பழமையான சிலையானது, விநாயகர் சிலை பற்றிய ஆய்வில் முக்கிய இடத்தை பெறும் என அருங்காட்சியக காப்பாட்சியர் தெரிவித்தார். கிருஷ்ணகிரி அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினரும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வரலாற்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த குழுவினர் காவேரிப்பட்டணம் அருகில் உள்ள தட்டக்கல் கிராமத்தில் ஆய்வு செய்தனர். அங்கு கூத்தாண்டவர் கோயில் வெளிப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையின் பழமை குறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:

இங்குள்ள விநாயகர் சிலையானது பல்லவர் காலத்து விநாயகர் உருவமைப்பு போல் உள்ளது. பல்லவர்கள் காலத்தில் இப்பகுதியை கங்கர்கள் ஆண்டதற்கான கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. எனவே, கங்கர் கால விநாயகருக்கான இலக்கணங்கள் கொண்டுள்ளது. இரண்டரை அடி உயரமுள்ள இந்த சிலை கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. குட்டி யானையின் தலையும், குட்டி மகுடமும், சிறிய காதுகளும், நான்கு கரங்களும் உள்ளவாறு செதுக்கப்பட்டுள்ளது. அமர்ந்தநிலை அமைப்பு வழக்கமாக லலிதாசனமாக இல்லாமல் பத்மாசனமாக, தாமரை இதழ் மேல் அமர்ந்த நிலையில் தோன்றுவது சிறப்பு. இது 1,200 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும். தமிழக விநாயகர் சிலைப்பற்றிய ஆய்வில் இது முக்கிய இடத்தை பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Ganesha ,Kaveripattanam , Kaveripattanam is a 1,200 year old statue of Ganesha
× RELATED திருவள்ளூர் அடுத்த மப்பேடு அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை