வாவிபாளையம் மதுக்கடைக்கு எதிர்ப்பு முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு

திருப்பூர்: வாவிபாளையத்தில் புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் அறிவித்த நிலையில், நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு காணப்பட்டது. திருப்பூர் நெருப்பெரிச்சலை அடுத்த வாவிபாளையம் வெலங்காடு பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. அந்த கடையால் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதுடன், பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவும் என்று கூறியும், கடையை உடனடியாக மூட வலியுறுத்தியும் பொதுமக்கள்,வியாபாரிகள் சார்பில் முற்றுகை மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து, மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் வைத்து, முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பேச்சுவார்த்தையின் முடிவில் டாஸ்மாக் தரப்பில் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் பள்ளிகள், கோவில்கள் அதிக அளவில் இல்லாததால் பெரிய அளவிலான பாதிப்பும் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. எனவே கடையை மூட வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறப்பட்டது. இந்நிலையில், டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம், வாயில் கருப்பு துணி கட்டி தர்ணா போராட்டம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றை ஒப்படைக்கும் போராட்டங்களை நேற்று நடத்துவதாக பொதுமக்கள் அறிவித்தனர்.

இதையடுத்து, மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அரசியல் கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, நேற்று வடக்கு தாசில்தார் அலுவலகத்தில், மாவட்ட கலால் துறை உதவி ஆணையர் ரங்கராஜன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

டாஸ்மாக் தரப்பில் மாவட்ட மேலாளர் சவுந்தரபாண்டியன், அரசு தரப்பில் வடக்கு தாசில்தார் பாபு, அனைத்து கட்சி சார்பில், ஈஸ்வரமூர்த்தி, ஜோதி (தி.மு.க.), ராமசாமி (காங்கிரஸ்) சிகாமணி, பழனிச்சாமி (மார்க்சிஸ்ட்), காளியப்பன் (இ.கம்யூ.,), கோவிந்தராஜ் (கொ.ம.தே.க) வேலுச்சாமி (குடியிருப்போர் நலச்சங்கம்) உள்பட பலர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையின் முடிவில், டாஸ்மாக் கடையை 90 நாட்களுக்குள் வேறு இடத்திற்கு மாற்றுவது. அப்படி வேறு இடம் கிடைக்கவில்லை என்றால் நிரந்தரமாக அந்த கடையை மூடி விடுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட அனைத்து அரசியல் கட்சியினர் போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்தனர். டாஸ்மாக் கடையை 90 நாட்களுக்குள் வேறு இடத்திற்கு மாற்றுவது. அப்படி வேறு இடம் கிடைக்கவில்லை என்றால் நிரந்தரமாக அந்த கடையை மூடி விடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

Related Stories:

>