×

தடையை மீறி விநாயகர் சிலை வைத்து பூஜை: மதுரை காமராஜர் பல்கலை.யில் பரபரப்பு

திருப்பரங்குன்றம்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தடையை மீறி விநாயகர் சிலை வைத்து பூஜை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தினுள் காமராஜர் சிலைக்கு அருகில் நேற்று அதிகாலை புதிதாக பீடம் கட்டப்பட்டு அதன் மேல் புதிய விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. இதுகுறித்து தகவலறிந்து வந்த  இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், பல்கலைகழக விதிமுறைகளுக்கு மாறாக விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது என்றும், உயர் கல்வி நிலையங்களில் மதம் சார்ந்த அடையாளங்களோடு சிலைகள் இருக்கக்கூடாது என்ற அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு (விதி எண் 15) எதிரானது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவசர அவசரமாக நிறுவப்பட்ட விநாயகர் சிலை அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டது. விநாயகர் சிலை இருந்த அந்த மேடையின் மேல் மீண்டும் பூச்செடிகளுடன் கூடிய பூந்தொட்டிகள் வைக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.


Tags : Madurai Kamaraj University ,Pooja ,Ganesha , Violation of the ban, Ganesha statue, worship, Madurai Kamaraj University., Excitement
× RELATED ஈரோட்டில் தடையை மீறி வேல்யாத்திரை நடத்த முயன்ற பாஜகவினர் மீது வழக்கு