×

ரஷ்யாவின் திடுக்கிட வைக்கும் விஷக்கொலைகள் எதிர்த்தால் மரணம்: விமான நிலையத்தில் தேநீர் குடித்த புடின் எதிர்ப்பாளர் உயிர் ஊசல்

மாஸ்கோ: ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்சி நவல்னியை, விஷம் கொடுத்துக் கொல்ல புடின் அரசு முயற்சி செய்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு,  சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த புதன்கிழமை காலை. சைபீரியாவில் இருந்து மாஸ்கோவுக்கு செல்ல விமானம் ஏறினார். அலெக்சி நவல்னி. விமானம் புறப்பட்டு நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது, நவல்னிக்கு திடீரென அதிகம் வியர்த்தது. கழிவறைக்கு சென்றார். அங்கேயே மயங்கி விழுந்தார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. விமானம் அவசரமாக கீழிறக்கப்பட்டது. நவல்னி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது. அவர் கோமாவில் உள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலை.

நல்லபடியாக விமானத்தில் ஏறிய நவல்னிக்கு, திடீரென என்ன நடந்தது? அவருடைய  செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘‘அவர் விஷம் கலந்த டீ குடித்து இருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். விமான நிலையத்தில் உள்ள உணவகத்தில்தான் விமானம் ஏறும் முன்பாக, அவர் டீ குடித்துள்ளார். எனவே, இதன் பின்னணியில் பெரிய சதி இருக்கிறது,’’ என்றார்.  நவல்னிக்கு தற்போது 44 வயது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினையும், அவருடைய அரசையும் கடுமையாக விமர்சித்து வருபவர். சமீபகாலமாகவே, அமலாக்கத்துறை சோதனை மற்றும் கைது நடவடிக்கை போன்ற அடக்குமுறைக்கு ஆளாகி வந்தார்.

இதற்கு முன்பு கொலை முயற்சி தாக்குதலும் நடந்திருக்கிறது. இதனால், அவருடைய குரலை ஒரேடியாக நிறுத்துவதற்காக, புடினின் உத்தரவுப்படி ரஷ்ய உளவுத்துறையான கேஜிபி.யின் செய்த செயலாக இது இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இச்சம்பவம், உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

குடும்பத்தினருக்கு அனுமதி மறுப்பு
நவல்னியை ஜெர்மனி அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க அவரது ஆதரவாளர்கள் முயன்று வருகிறார்கள். ஆனால், அதற்கு சைபீரிய மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.  பயணம் மேற்கொள்ளும் நிலையில் அவரது உடல் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் அவரை பார்க்க, குடும்பத்தினருக்கும் இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை. இதன் பின்னணியில் ரஷ்யாவின் அழுத்தம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

இது ஒண்ணும் புதுசு கிடையாது
ரஷ்யாவில் அரசுக்கு எதிராக செயல்படுபவர்களின் மூச்சை, விஷம் கொடுத்து நிறுத்தும் சம்பவங்கள் ஏற்கனவே பலமுறை நடந்துள்ளது. அவற்றில் சிலவற்றின் விவரங்கள் வருமாறு:
*  அலெக்சாண்டர் லிட்வினென்கோ: இவர் ஒரு ரஷ்ய உளவுத்துறை அதிகாரி. 2000ம் ஆண்டு லண்டனுக்குத் தப்பி ஓடினார். 2006ம் ஆண்டில் அங்கு டீ குடித்த பிறகு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். 3 வாரங்களுக்குப் பிறகு உயிரிழந்தார். அவர் பருகிய தேநீரில் ‘ரேடியோ ஆக்டிவ் பொலோனியம்’ என்ற கடுமையான விஷம் கலக்கப்பட்டு இருந்ததாக,  பின்னர் கண்டறியப்பட்டது.
* அன்னா போலிட்கோவ்ஸ்காயா: இவர் ஒரு பெண் பத்திரிகையாளர். ரஷ்ய அரசை கடுமையாக விமர்சித்து எழுதி வந்தார். அவரும் இதேபோல் 2004ம் ஆண்டு ஒரு இடத்தில் தேநீர் குடித்த பிறகு மயங்கி விழுந்தார். டீயில் கலந்திருந்த விஷம் காரணமாக 2 ஆண்டுகளாக கடுமையான உடல் உபாதைகளை சந்தித்து, சித்ரவதையை அனுபவித்து இவர் இறந்தார்.
* ஜூனியர் விளாடிமிர் கரா முர்சா:  ரஷ்யாவின் எதிர்க்கட்சி செயல்பாட்டாளரான இவர்,  இதே தேநீர் பாணியில் விஷம் கொடுக்கப்பட்டு, கொல்லப்பட்டார்.
* செர்கே ஸ்கிரிபால் : இவர் ரஷ்ய உளவாளி, பிரிட்டனுக்கு ஆதரவாக செயல்பட்டதை கண்டுபிடித்தது ரஷ்ய அரசாங்கம். இதனால், லண்டனுக்குத் தப்பினார். அங்கு, 2018ம் ஆண்டு அவர் மீது மர்மமான முறையில் விஷத் தாக்குதல் நடத்தப்பட்டு, இவரும், உடனிருந்த மகளும் நரக வேதனைகளை அனுபவிக்க வைத்து கொல்லப்பட்டனர்.

Tags : Death ,airport ,Russia , Russia, poisonings, death, airport, tea, anti-Putin, life pendulum
× RELATED சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா திட்டம் அறிமுகம்: வரும் 31ம் தேதி அமல்