×

கேரள தலைமை செயலகத்தில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி ஆய்வு: முதல்வர் ஆபீசுக்கு அடிக்கடி வந்த சொப்னா: சிசிடிவி ஆதாரம் சிக்கியது

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் அலுவலகத்துக்கு தங்க கடத்தல் ராணி சொப்னா, அடிக்கடி வந்து சென்றதற்கான  ஆதாரம் என்ஐஏயிடம் சிக்கி உள்ளது. கேரளாவில்  புயலை கிளப்பியுள்ள தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னாவுக்கு, முதல்வர்  அலுவலகத்தில் பெரும் செல்வாக்கு இருந்ததாக, நீதிமன்றத்தில் என்ஐஏ தெரிவித்தது. பின்னர், இது தொடர்பான ஆதாரங்களை சேகரிக்கும்  பணியில்  அது+ ஈடுபட்டது.  தலைமைச் செயலகத்தில்  பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராக்களில் சொப்னா வந்து சென்றதற்கான காட்சிகள்  பதிவாகி இருக்கலாம் என்பதால், 2019 ஜூலை 1 முதல் 2020 ஜூலை 5 வரை உள்ள வீடியோவை அளிக்கும்படி, கேரள தலைமைச் செயலாளருக்கு என்ஐஏ கடிதம் அனுப்பியது.

சில தினங்களுக்கு முன்பு தலைமைச் செயலகத்தில் உள்ள கண்காணிப்பு  கேமராக்களின் கட்டுப்பாட்டு அறைக்கு என்ஐஏ அதிகாரிகள் சென்று பதிவான  காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, முதல்வர் அலுவலகம் அமைந்துள்ள  வடக்குப் பகுதி கட்டிடத்தில் இருந்த கேமராவில் சொப்னா வந்து செல்லும்  காட்சிகள் பதிவாகி இருந்தன.
கட்டிடத்தின் 3வது மாடியில் முதல்வர்  அலுவலகமும், 5வது மாடியில் சிவசங்கரின் அலுவலகமும் உள்ளது. எனவே, முதல்வர்  அலுவலகத்துக்கு சொப்னா வந்ததை என்ஐஏ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.  இதையடுத்து, உடனடியாக அந்த காட்சிகளை ஒப்படைக்க தலைமைச்செயலாளருக்கு  மீண்டும் என்ஐஏ கடிதம் கொடுத்தது. ஆனால், இவற்றை கொடுக்க, கேரள அரசு மறுத்துள்ளது.

1 கோடி கிடைத்தது எப்படி?
கேரள அரசு ‘லைப் மிஷன்’ என்ற பெயரில் வீடு  இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.  இதன்படி, வடக்கான்சேரி பகுதியில் வீடு கட்டி கொடுக்க துபாயை சேர்ந்த ஒரு  சமூக சேவை நிறுவனம் முன்வந்தது. மேலும், ₹20 கோடியை அந்த நிறுவனம்  ஒதுக்கியது. இந்த வீடுகள் கட்டிக்கொடுக்கும் பணி ஒரு தனியார்  நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்காக, இந்த நிறுவனம் ₹3.50 கோடியை  கமிஷனாக சொப்னா கும்பலிடம் கொடுத்ததாக தகவல் வெளியானது. இந்த தொகையை  திருவனந்தபுரம் அமீரக தூதரகத்தில் கணக்காளராக பணிபுரிந்த எகிப்து நாட்டை  சேர்ந்த காலித் முகமது அலி சவுக்ரியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தில்தான் சொப்னாவுக்கு 1 கோடி கொடுத்துள்ளார்.  இதுதான், சொப்னா லாக்கரில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜாமீன் மனு நிராகரிப்பு
இந்த வழக்கில் ஜாமீன் கோரி சொப்னா தாக்கல் செய்த மனு மீது, எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடந்தது. அப்போது வாதாடிய அமலாக்கத்துறை வக்கீல், ‘‘வழக்கு  விசாரணை முக்கிய கட்டத்தில் உள்ளது. சொப்னாவுக்கு பல முக்கிய  பிரமுகர்களுடன் தொடர்பு இருப்பதால், ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளை  கலைத்து விடுவார். எனவே, அவரை  ஜாமீனில் விடக்கூடாது,’’ என்றார். இதை ஏற்ற நீதிமன்றம்,  சொப்னாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

Tags : NIA ,Office ,Chief Minister ,Kerala ,CM ,Sopna ,headquarters ,CCTV , Kerala General Secretariat, NIA officials, Chief Minister, Sopna, CCTV source
× RELATED பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு...