×

கொரோனா ஊரடங்கு, ஊர்வலத்திற்கு அரசு தடையால் விநாயகர் சிலை விற்பனை கடும் பாதிப்பு: வியாபாரிகள் வேதனை

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவை ஆண்டுதோறும் மும்பைக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் வெகுவிமர்சையாக மக்கள் கொண்டாடுவர். குறிப்பாக, பல்வேறு இந்து அமைப்பினரும் தங்கள் பகுதியில் விநாயகர் சிலைகளை வடிவமைத்து 5 அல்லது 9 நாட்கள் என பூஜை செய்வார்கள். யார் பெரிய விநாயகர் சிலை வைக்கிறார்கள், யார் வித்தியாசமான சிலைகளை வைக்கிறார்கள் என்பதில் இவர்களுக்குள் போட்டா போட்டி நிலவும்.  அந்த வகையில் ஆண்டுதோறும் சென்னை ஓட்டேரி, கொளத்தூர், புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

சென்னையில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் விற்கப்பட்டு வந்தாலும்   ஓட்டேரி குயப்பேட்டையில் விற்கப்படும் விநாயகர் சிலைகள் பிரசித்தி பெற்றவை.
கடந்த மூன்று தலைமுறையாக இந்த பகுதியில் குயவர்கள் ஆண்டுதோறும் விநாயகர் சிலைகளை வடிவமைத்தும், ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்தும் விற்று வருகின்றனர்.  சமீபகாலமாக திருப்பதியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் அதிகளவில் விற்று வந்தன. காரணம் தமிழகத்தில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் எனும் வேதி பொருளை பயன்படுத்தி விநாயகர் சிலைகளை செய்ய தடை விதித்துள்ளதால் ஆந்திராவில் இருந்து காகிதக்கூழ் மூலம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை விற்று வந்தனர். ஒரு அடி முதல் 10 அடி வரை விநாயகர் சிலைகள் ஆண்டுதோறும் செய்து விற்பனை செய்தனர்.  

சென்னை ஓட்டேரி குயப்பேட்டை பகுதியில்  உள்ள வெங்கடேசன் பக்தன் தெரு, சச்சிதானந்தம் தெரு, அருணாச்சலம் தெரு, புது மாணிக்கம் தெரு ஆகிய தெருக்களில் இரு புறங்களும் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகளை வைத்து விற்பனை செய்தனர். ஆயிரம் ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை விநாயகர் சிலைகள் வேலைபாடுகளுக்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்தஆண்டு கொரோனா தொற்று வைரஸ் தாக்கத்தினால் விநாயகர் சிலைகளை வைக்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் எந்த ஒரு பெரிய  விநாயகர்  சிலைகளையும் விற்காமல் ஒரு அடி முதல் இரண்டடி உயரமுள்ள சிறிய விநாயகர் சிலைகள் மட்டுமே தற்போது விற்பனைக்கு  வைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திக்கு முன் 10 நாட்கள் கலகலப்பாக காணப்படும் ஓட்டேரி குயப்பேட்டை பகுதி தற்போது களையிழந்து காணப்படுகிறது.

இந்த வியாபாரத்தை நம்பி 200 குடும்பங்களைச் சேர்ந்த 800 பேர் வாழ்ந்து வருகின்றனர். தற்போது சிறிய அளவில் தயாரிக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் கடலூர், பெரியபாளையம் ஆகிய பகுதியில் இருந்தும் மற்றும் ஓட்டேரி பகுதியில் தயாரிக்கப்பட்டும் விற்பனைக்கு வந்துள்ளன. இதுகுறித்து, குயப்பேட்டை பகுதியில் மூன்று தலைமுறைகளாக விநாயகர் சிலைகளை விற்பனை செய்து வரும் விநாயகம் கூறுகையில், “விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முன்கூட்டியே அதாவது ஆறு மாதத்திற்கு முன்னரே எங்கள் நகைகளை அடகு வைத்து வேலைகளை செய்யத் தொடங்குவோம்.

ஆண்டுதோறும் செய்யும் வேலைகள் விநாயகர் சதுர்த்தி நேரத்தில்  விற்பனையாகும் சிலைகளை பொறுத்து எங்களுக்கு வருமானம் வரும். 5 லட்சம் ரூபாய் முதல் போட்டால் ஒரு லட்சம் ரூபாய் லாபம் வரும். ஆனால் சமீபகாலமாக விநாயகர் சிலைகள் விற்பனை தொடர்ந்து இறங்கு முகமாகவே இருந்து வருகிறது. மேலும், இந்த வருடம் சுத்தமாக எங்களது வியாபாரம் படுத்து விட்டது. நகைகளை வைத்து முதலீடு செய்துள்ளோம். ஆனால் இவை திரும்ப வருமா என தெரியவில்லை. கடந்த மூன்று தலைமுறைகளாக இந்த இடத்தில் 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் பொம்மை மற்றும் விநாயகர் வியாபாரம் செய்து வருகிறோம். காலப்போக்கில் இந்த தொழில் அழிந்து வருகிறது.

எங்களது பிள்ளைகளை நாங்கள் படிக்க வைத்திருக்கிறோம். இந்த தொழிலில் அவர்களை ஈடுபடுத்த போவதில்லை. எங்களது கஷ்டம் எங்களோடு போகட்டும்” என வேதனையுடன் தெரிவித்தார். கொரோனா தொற்றால் பலரது வாழ்க்கையில் மாற்றங்களும் ஏமாற்றங்களும் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. அந்த வகையில் விநாயகரை நம்பி பிழைப்பு நடத்தும் இவர்களையும் கொரோனா தாக்கம் விட்டுவைக்கவில்லை. இனி இவர்களது வாழ்க்கையில் வெளிச்சம் உண்டாகுமா என்பது அந்த விநாயகருக்கே வெளிச்சம்.

Tags : Traders ,Ganesha ,Corona , Corona, procession, procession, Ganesha statue, merchants
× RELATED பழமையான அன்னபூரணி சிலை கனடா நாட்டில்...