சென்னையில் ரவுடிகள் வேட்டை தொடங்கியது பிரபல தாதா திருவேங்கடம் துப்பாக்கி முனையில் கைது

சென்னை: கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 30க்கும் மேற்பட்ட வழக்குகளால் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வந்த ரவுடி திருவேங்கடத்தை போலீசார் திருமண விழா ஒன்றில் துப்பாக்கி முனையில் அதிரடியாக கைது செய்தனர்.   தமிழகத்தில் நாளுக்கு நாள் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. உதாரணமாக, இரு நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள மேலமங்கலக்குறிச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரைமுத்து (30) என்பவரை போலீசார் பிடிக்க சென்ற போது, ஏற்பட்ட மோதலில் காவலர் சுப்பிரமணியன் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார்.  அதை தொடர்ந்து சிறிது நேரத்தில் வெடிகுண்டு வீசிய ரவுடி துரைமுத்துவும் உயிரிழந்தார்.

இதை தொடர்ந்து, ஏ பிளஸ் ரவுடிகள், தாதாக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கைது செய்ய டிஜிபி திரிபாதி அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் போலீஸ் கமிஷனர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை தற்போது தொடங்கி உள்ளது. சென்னை அயனாவரம் கே.கே.நகர் 2வது தெருவை சேர்ந்த கொலை மற்றும் கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து, மாமூல் என 51 வழக்குகளில் தொடர்புடைய சங்கர் (எ) இளநீர் சங்கர் (48) என்பவரை வழக்கு ஒன்றில் அயனாவரம் இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்ய சென்ற போது ஏற்பட்ட மோதலில் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல் என 30க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய வேளச்சேரியை சேர்ந்த பிரபல ரவுடியும் தாதாவாக வலம் வந்தவருமான திருவேங்கடம் (52) என்பவரை கிண்டி போலீசார் ஒரு திருமண விழாவில் துப்பாக்கி முனையில் நேற்று காலை அதிரடியாக கைது செய்தனர்.

ரவுடி திருவேங்கடம் ெதன்சென்னை பிரபல தாதா சிடி மணியின் எதிரணியில் உள்ளவர். எல்லை பிரச்னை மற்றும் மாமூல் வசூலிப்பதில் ஏற்பட்ட தகராறில் இருவரும் தனித்தனியாக கூலிப்படையினரை வைத்து தங்களது ரவுடி தொழிலை செய்து வருகின்றனர். திருவேங்கடம் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை மற்றும் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தாதா சிடி மணிக்கும் ரவுடி திருவேங்கடத்திற்கும் ஏற்பட்ட தகராறில் திருவேங்கடம் இரண்டு முறை சிடி மணியை கொலை செய்ய முயற்சி செய்தார். ஆனால் அந்த முயற்சியில் சிடி மணி தப்பி விட்டார். இதனால் சிடி மணி ரவுடி திருவேங்கடத்தை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்தார். அதேநேரம், திருவேங்கடம் ஒருபக்கம் தாதா சிடி மணிக்கு பயந்தும் மறுபக்கம் போலீசாரின் என்கவுன்டருக்கு பயந்தும் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார். சில ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்த திருவேங்கடம் தனது ஆதரவாளர்கள் மூலம் தென்சென்னையில் இன்று வரை ரவுடி தொழில் செய்து வருகிறார். திருவேங்கடம் மீதான வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. மேலும் பல வழங்குகளில் நீதிமன்றம் திருவேங்கடத்தை கைது ெசய்ய பிடிவாரன்ட் பிறப்பித்தது.

இதற்கிடையே உறவினர் வீட்டு திருமணத்திற்கு திருவேங்கடம் வெளிநாட்டில் இருந்து தனது குடும்பத்துடன் சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்தார். ஆனால் அவர் யார் கண்களிலும் படாமல் ஊரடங்கு நேரத்தில் ரகசியமாக இருந்து வந்தார். பிறகு வேளச்சேரியில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ரவுடி திருவேங்கடம் கலந்து கொண்டார். இவரை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் வேளச்சேரி முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர்.

 இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி துணை கமிஷனர் பிரபாகரன் மற்றும் கிண்டி உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் சாதாரண உடையில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரவுடி திருவேங்கடத்தை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த சம்பவத்தின் போது திருமண நிகழ்ச்சியில் இருந்த அனைவரும் அலறி அடித்து ஓடினர். இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  திருவேங்கடத்தை போலீசார் கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்து ெசன்று விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி திருவேங்கடத்தின் சகோதரர் சிறைத்துறையில் டிஐஜியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் இருந்து உறவினர் திருமணத்திற்கு வந்த போது போலீஸ் அதிரடி: ரவுடி சிடி மணிதான் காரணமா?

தென்சென்னையை பொறுத்தவரை ரவுடி சி.டி.மணியும், திருவேங்கடமும் இரு துருவங்களாக செயல்பட்டு வந்தனர். ஒருவரை ஒருவர் கொலை செய்வதற்கு சமயம் பார்த்து வந்தனர். இதனால் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் சி.டி.மணியை என்கவுன்டர் செய்ய, வெளிநாட்டில் இருந்தபடியே திருவேங்கடம் ஒரு உதவி கமிஷனர் மூலம் ஏற்பாடு செய்தார். இதற்காக பல கோடி ரூபாயை செலவு செய்துள்ளார். ஆனால் பணத்தை அந்த உதவி கமிஷனரே சுருட்டி விட்டார். சி.டி.மணியை என்கவுன்டர் செய்ய முடியவில்லை.

தற்போது சி.டி.மணி, சென்னையில் உள்ள அதிமுக மாவட்டச் செயலாளர் ஒருவரிடம் நெருக்கமாக உள்ளான். தி.நகரில் உள்ள பல்வேறு கிளப்புகளுக்கு மாவட்ட செயலாளருடன் சென்று வருகிறான். இதனால் அவன் மீது பல கொலை, வழிப்பறி, ஆள்கடத்தல், ஆயுத வழக்கு உள்பட பல வழக்குகள் இருந்தாலும், தேடப்பட்டு வரும் குற்றவாளியாக இருந்தாலும் அவனை போலீசார் பிடிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தற்போது திருவேங்கடம் சென்னை வந்துள்ள தகவலையும் சி.டி.மணிதான் தன்னுடைய ஆதரவு மாவட்டச் செயலாளர் மூலம் போலீஸ் உயர் அதிகாரிக்கு தெரிவித்து, அவர் மூலம் சிக்க வைத்து விட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Related Stories:

>