×

வீடுகளில் வைத்துள்ள விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க அனுமதி: பொது இடங்களில் வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் தடை

சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், குறிப்பிட்ட நாட்கள் பூஜைக்கு பிறகு சிலைகளை அருகில் உள்ள நீர்நிலைகளில் தனிநபர் கரைக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், பொது இடங்களில் சிலை வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும்,  ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், சிலைகளை கடலில் கரைக்கவும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உத்தரவை எதிர்த்து, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த இல.கணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், ‘பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் ஊர்வலமாக எடுத்துச்சென்று கடலில் கரைக்கவும் அனுமதிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார்.  இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, விநாயகர் சதுர்த்தி ஆண்டாண்டு காலமாக கொண்டாடப்பட்டு வருவதாலும், மக்களின் உணர்வுப்பூர்வமான விஷயமாக இருப்பதாலும், அரசு இந்த விவகாரத்தில் ஏதேனும் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்புள்ளதா, கொரோனா தொற்று சூழல் குறித்து எங்களுக்கு நன்றாக தெரியும்.

அதனால்,  பெரிய அளவிலான ஊர்வலங்களை அனுமதிக்க முடியாது என்பதில் மாற்று கருத்தில்லை. இதுகுறித்து அரசிடம் கேட்டு சொல்ல வேண்டும் என்று அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டிருந்தனர். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், மதுரை கிளை நீதிமன்றம் இதுபோன்ற வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. மக்களின் தனிநபர் வழிபாட்டிற்கு அரசு தடையோ கட்டுப்பாடோ விதிக்கவில்லை. மெரினா கடற்கரை தற்போது தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.   அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சிறு கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன.

மெரினாவில் சிலைகளை கரைத்துவிட்டு செல்வதில் என்ன பிரச்னை இருக்கப்போகிறது, மீனவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதே. கூவம் ஆற்றில் கூட விநாயகர் சிலைகளை கரைக்கலாமே, சிலைகளை கரைக்க வரும் மக்கள் அங்கேயே தங்கி விடுவதில்லையே என்று கேட்டனர்.  இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோர், ஆயிரக்கணக்கான மக்கள் கூடும்போது, சட்டம் ஒழுங்கு பிரச்னை வந்தால் அரசு என்ன செய்யும் என்றனர்.  இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் கார்த்திகேயன் வாதிடும்போது, விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு கடந்த 22ம் தேதியே தமிழக அரசு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

வீடுகளிலும், வீடுகளின் முன்பும் சிலைகளை வைத்து வணங்கி வருகிறோம். குறிப்பிட்ட நாட்களுக்கான பூஜைகள்  முடிந்தவுடன் சிலைகளை  வீட்டுக்குள்ளேயே வைத்திருக்க முடியாது. அரசின் உத்தரவுக்கு முழுவதும் ஒத்துழைப்பு தந்து விழாவை எந்த பிரச்னையும் இல்லாமல் கொண்டாடுவோம் என்று வாதிடப்பட்டுள்ளது. ஊர்வலமாக சிலைகளை கொண்டு செல்ல மாட்டோம் என்று சம்பந்தப்பட்ட அமைப்புகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று 2 வகையில்தான் பரவும். ஏராளமான மக்கள் ஒரே இடத்தில் கூடுவதும், அதே இடத்தில் நீண்ட நேரம் தங்கி இருப்பதும் கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும். அதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் எங்களுக்கு மாற்று கருத்தில்லை.

தனிநபர்கள் விநாயகர் சிலைக்கு பூஜை செய்த பிறகு, அருகில் உள்ள கோயில்களுக்கு வெளியிலோ, அல்லது தனிநபராக சிலைகளை எடுத்து சென்று அருகில் உள்ள நீர்நிலைகளிலோ கரைக்கலாம். சாந்தோமிலிருந்து நேப்பியர் பாலம் வரை சிலைகளை கரைத்தால் பிரச்னை ஏற்படும் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ஒரு முறைதான் களிமண்ணில் சிலை தயாரிக்கிறார்கள். இந்த சிலைகளை நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியாது. எனவே, ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள சிலைகளை அவர்கள் விற்பனை செய்யவில்லை என்றால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.எனவே கீழ்க்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.

வீடுகளின் முன்பு தனிநபர்கள் விநாயகர் சிலையை வைத்து வழிபடலாம். விநாயகர் சிலையை குறிப்பிட்ட நாட்கள் பூஜைக்கு பிறகு தனி நபர்கள் எடுத்து சென்று கோயில்களின் நுழைவு பகுதியில் வைக்க அனுமதி தரப்படுகிறது. சிலைகளை அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைப்பதற்கு தனியாகத்தான் செல்ல வேண்டும். அமைப்பு சார்பில் விழா நடத்த எந்த அனுமதியும் தரப்படவில்லை. சாந்தோமிலிருந்து நேப்பியர் பாலம் வரை சிலை கரைப்பு தொடர்பான எந்த செயல்பாடும் நடைபெறக்கூடாது. இந்த உத்தரவு அரசின் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டே செயல்படுத்தப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிகையை எடுக்கலாம். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

Tags : idols ,places ,houses ,water bodies ,processions ,Ganesha , Ganesha statues, water levels, public places, procession
× RELATED போதை பொருட்கள் கடத்தலில் சட்டவிரோத...