×

‘இந்தி தெரியவில்லை என்றால் வகுப்பிலிருந்து வெளியேறுங்கள்’ தமிழக யோகா மருத்துவர்களுக்கு மத்திய ஆயுஷ் அதிகாரி மிரட்டல்

தலைமை செயலாளர் மூலம் நடவடிக்கை எனவும் எச்சரிக்கை

சென்னை: ஆன்லைன் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட தமிழக யோகா மருத்துவர்களை இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள், கேள்வி கேட்டால் தலைமை செயலாளர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ஆயுஷ் அமைச்சக்கத்தின் செயலர் ராஜேஷ் கோட்சே மிரட்டியுள்ளார். இச்சம்பவம் சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் யோகாவை மக்களிடம் கொண்டுசென்று சேர்க்கும் வகையில் யோகா சம்பந்தமான படிப்பு முடித்த 1.25 லட்சம் பேரை மத்திய ஆயுஷ் அமைச்சக்கம் நாடு முழுவதும் நியமிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி 350 நியூரோபதி மற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களை தேர்வு செய்து அவர்களின் பட்டியல் மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் இருந்து மாவட்டத்திற்கு ஒரு மருத்துவர் என 38 யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களின் பெயர் பட்டியல் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநரகம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் கடந்த 18ம் தேதி முதல் நடந்தன. நாடு முழுவதும் 350 மருத்துவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொண்டனர். கடைசி நாளான 20ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் பயிற்சி வகுப்புகள் ஆரம்பித்தவுடன் மத்திய ஆயுஷ் செயலர் ராஜேஷ் கோட்சே கலந்துகொண்டு இந்தியில் பேசியுள்ளார். அப்போது, தமிழகத்தில் இருந்து கலந்துகொண்ட மருத்துவர்கள், ‘எங்களுக்கு இந்தி தெரியாது, நீங்கள் பேசுவது புரியவில்லை. யோகா மற்றும் இயற்கை மருத்துவம் முறை என்று இருக்கும்போது யோகாவை மட்டுமே கூறுகிறீர்கள்.

இயற்கை மருத்துவத்தை புறக்கணிக்கிறீர்களா?’ என்று ஆன்லைன் வகுப்பு கமாண்ட் பாக்சில் பதிவிட்டுள்ளனர். ஆங்கிலத்தில் பேசுங்கள் என்றும் கூறியுள்ளனர். இதனால், கோபமடைந்த அவர், ‘‘எனக்கு ஆங்கிலம் தெரியாது. இந்தி தெரியவில்லை என்றால் ஆன்லைன் வகுப்பில் இருந்து விலகுங்கள்’’ என்று கோபமாக பேசியுள்ளார். இதனால் அனைவரும் அவரிடம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் மாலை 6 மணி வரை நடைபெற வேண்டிய பயிற்சி வகுப்பு 4 மணிக்கே ரத்து செய்து விட்டு இணைப்பை துண்டித்து விட்டனர். தமிழகத்தில் இருந்து கலந்துகொண்ட மருத்துவர்களை இந்தி தெரியவில்லை என்றால் கூட்டத்தில் இருந்து வெளியேறுங்கள் என்று கூறிய சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

மேலும், கோபம் அடைந்த மத்திய ஆயுஷ் செயலர் ராஜேஷ் கோட்சே, தனக்கு எதிராக யாரெல்லாம் பேசினார்களோ, அவர்களின் பெயர் பட்டியலை தயார் செய்து அனுப்பி வையுங்கள். அந்தந்த மாநில தலைமை செயலாளர்களுக்கு அவர்களின் பெயர் பட்டியலை அனுப்பி வைத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்கிறேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.

2 ஆண்டுக்கு முன்பே ஓய்வு பெற்றவர்
மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் ெசயலர் பதவியில் உள்ள ராஜேஷ் கோட்சே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்றவர். பாஜவின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களுக்கு வேண்டியவர் என்பதால் அவர்களின் சிபாரிசில் மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்aபு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags : yoga practitioners ,Tamil Nadu ,AYUSH , Tamil Nadu Yoga Physicians, Central AYUSH Officer, Intimidation
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...