×

அரசு விழாக்கள், ஆய்வுக்கூட்டங்களுக்கு திமுக எம்பி, எம்எல்ஏக்களை அழைத்து மக்களின் குறைகளை எடுத்துரைத்து தீர்வுகாண வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: “திமுக எம்பி, எம்எல்ஏக்களை அரசு விழா, ஆய்வுக்கூட்டங்களுக்கு அழைத்து, உரிய கண்ணியத்துடன் நடத்தி- மக்களின்  குறைகளை எடுத்துரைத்து தீர்வு காண  வழிவகை ஏற்படுத்த வேண்டும்” என்று  முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: அரசு விழாக்களிலும், ஆய்வுக்கூட்டங்களிலும், பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் திமுகவின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை வேண்டுமென்றே தொடர்ந்து புறக்கணித்துவரும் அதிமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 தர்மபுரியில் நடைபெற்ற கொரோனா குறித்த ஆய்வுக் கூட்டத்தில், திமுக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் டாக்டர் செந்தில்குமாரை அனுமதிக்க மறுத்ததோடு மட்டுமின்றி, “நான் நடத்தும் ஆய்வுக் கூட்டங்களில் எம்பியை எப்படி அனுமதிக்க முடியும்” என்று முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியிருப்பது, ஜனநாயக விரோதம் மட்டுமல்லாமல்; பண்பாடற்ற செயல், அநாகரிகத்தின் உச்சம் என்றுதான் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
 அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்திலோ அல்லது அக்கட்சி நடத்தும் பொதுக்கூட்டங்களிலோ பங்கேற்க அனுமதி கேட்கவில்லை. கொரோனா நோய் மற்றும் கொரோனா மரணங்களைத் தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கத்தான் அனுமதிக்க வேண்டும் என்று கோருகிறார்கள்.

மக்களாலோ, பெரும்பான்மை உறுப்பினர்களாலோ தேர்ந்தெடுக்கப்படாமல், ‘லாட்டரி’ அடித்ததைப் போலக் கூவத்தூரில் முதல்வர் ஆக்கப்பட்டதால், மக்களின் அருமை அவருக்கு விளங்கவில்லை போலும்.மக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டால், அவர்கள் எழுப்பிடும் மக்கள் பிரச்னைகளுக்குப் பதில் சொல்ல வேண்டுமே என்ற தாழ்வு மனப்பான்மை போலும்.  திமுக எம்பி, எம்எல்ஏக்களை அரசு விழாக்களுக்கு அழைப்பதை அமைச்சர்களும், முதலமைச்சருமே கூட தவிர்ப்பது, ஆரோக்கியமான ஆட்சி  முறைக்கு அழகல்ல; அருவருப்பானதாகும். அமைச்சர்களின் ஊழல் முறைகேடுகளை எங்கே மேடையில் பேசி விடப் போகிறார்களோ என்ற அச்சத்தின் காரணமாகவே இப்படி திமுக எம்பி, எம்எல்ஏக்களை அரசு விழாக்களில் கலந்து கொள்ள விடாமல் தடுக்கிறது அதிமுக அரசு.

ஏற்கனவே திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் தன்னை அரசு விழாவிற்கு அழைக்கவில்லை என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் மீது உரிமை மீறல் பிரச்சினை கொடுத்த போது, தமிழக சட்டப் பேரவைத் தலைவர், “அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் அரசு விழாக்களுக்குக் கண்டிப்பாக அழைக்க வேண்டும். அவர்களின் பெயரை அரசு விழாக்களின் அழைப்பிதழில் பிரசுரிக்க வேண்டும்” என்று அதிமுக அரசுக்கு அறிவுரை செய்தார். ஆனால் தமிழகச் சட்டமன்றப் பேரவைத் தலைவரின் அறிவுரையையே அதிமுக அமைச்சர்களும் கேட்பதில்லை; முதலமைச்சரும் கண்டு கொள்வதில்லை என்பது அராஜகத்தின்பாற்பட்டதாகும். அந்த அறிவுரை வெற்று அறிவுரை ஆகி, காற்றோடு கலந்து விட்டது!.

ஆகவே அரசு விழாக்களுக்கும்-மாவட்ட அளவில் நடைபெறும் ஆய்வுக்கூட்டங்களுக்கும் திமுக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களை அழைக்காமல்- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அவமதிக்கும் போக்கை முதல்வரும்- அதிமுக அமைச்சர்களும் உடனடியாகக் கைவிட வேண்டும்; கைவிடா விட்டால் மக்கள் மேலும் கடுமையாக தண்டிப்பார்கள். பிரதான எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், ‘’கொரோனா காலத்தில்’’ நான் அளித்த பல ஆக்கபூர்வமான ஆலோசனைகளைக் கேட்காத முதல்வர்- இந்த விஷயத்தில், குறைந்தபட்சம் தமிழக சட்டப் பேரவைத் தலைவரின் அறிவுரைக்காவது செவிமடுக்க வேண்டும் என்றும், திமுக எம்பி, எம்எல்ஏக்களை அரசு விழாக்களுக்கும், ஆய்வுக்கூட்டங்களுக்கும் அழைத்து, உரிய கண்ணியத்துடன் நடத்தி-மக்களின் குறைகளை எடுத்துரைத்துத் தீர்வுகாண  வழிவகை ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் பழனிசாமிக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விமான நிலைய தனியார்மயமாக்கல் முடிவை திரும்ப பெற வேண்டும்
திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது டிவிட்டர் பக்க பதிவில் கூறியிருப்பதாவது: விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் ஒருதலைபட்சமான முடிவானது, மாநில அரசிடமிருந்து அதன் உரிமையையும் தன்னாட்சியையும் பறிப்பதாகும். இது, விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் எந்தவொரு முடிவும் மாநில அரசுடன் கலந்தாலோசிக்கப்பட்டே எடுக்கப்படும் என்ற 2003ம் ஆண்டு வழங்கப்பட்ட உறுதியை மீறுவதாகும். இம்முடிவை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : MPs ,MK Stalin ,government ceremonies ,DMK ,meetings , Government ceremonies, review meetings, DMK MPs, MLAs, MK Stalin
× RELATED அநீதிக்கு எதிரான வெற்றி நம் நாட்டின்...