விநாயகர் சதுர்த்தியை கொண்டாட சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்வதால் கடும் வாகன நெரிசல்

சென்னை: விநாயகர் சதுர்த்தியை கொண்டாட சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு தங்கள் வாகனங்களில் மக்கள் படை எடுக்க தொடங்கியிருப்பதால் சுங்கசாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இ-பாஸ் முறையில் தளர்வு கொண்டு வரப்பட்டதால் வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கி கிடந்தவர்கள் தற்போது தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதும், திரும்பி வருவதுமாக உள்ளனர். இரண்டு நாட்களுக்குள் 22ஆயிரம் பேர் சென்னை திரும்பினர். இந்நிலையில், இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.  நாளை முழு ஊரடங்கு என 2 நாள் விடுமுறை வருகிறது. இவ்வளவு நாள் எங்கும் செல்ல முடியாமல் வீடுகளிலே முடங்கி கிடந்த மக்கள் இ-பாஸ் தளர்வுகளால் விநாயகர் சதுர்த்தியை தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாட தயாராகிவிட்டனர்.

கடந்த 5 மாதங்களாக எந்த ஒரு பண்டிகைகளோ, கோயில் விழாக்களோ கொண்டாட தடை விதிக்கப்பட்டிருந்தது.  மேலும் மக்கள் எங்கும் செல்ல முடியாத நிலை இருந்தது. ஆனால் இப்போது இ-பாஸ் தளர்வால் சென்னையிலேயே முடங்கிக் கிடந்த மக்கள் தங்களின்  சொந்த ஊர்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வாகனங்களில் செல்கின்றனர்.   குறிப்பாக சென்னையில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள் ஊர்களுக்கு புறப்பட்டுள்ளதால் சுங்கசாவடிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அச்சிறுப்பாக்கம் அடுத்த ஆத்தூர் சுங்க சாவடியில் கடும் வாகன நெரிசல் காணப்பட்டது.  பலர் பைக்குகள் உள்ளிட்ட வாகனங்களில் குடும்பம், குடும்பமாக செல்கின்றனர். வாகன போக்குவரத்து இல்லாமல் காற்று வாங்கி கொண்டிருந்த தேசிய நெடுஞ்சாலைகள் கடந்த சில நாட்களாக வெகு பிசியாகிவிட்டது.

வாகனங்கள் அதி வேகத்தில் செல்ல தொடங்கிவிட்டன.  போக்குவரத்து இல்லாத நிலையில் மோட்டார் பைக்குகளில் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். ஆனால் இப்போது அந்த சாலைகளில் வாகனங்கள் அதிகரித்துள்ள நிலையில் மோட்டார் பைக்குகளில் செல்வது ஆபத்தானது. எனவே மோட்டார் பைக்குகளில் செல்பவர்களை தடுத்து அவர்களை பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  மேலும், சுங்க சாவடிகளில் பல கி.மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக விநாயகர் சதுர்த்தியை கொண்டாட சென்றவர்கள் பல மணி நேரம் காத்து கிடப்பதால் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.   இ-பாஸ் தளர்வுகளால் 2 நாள் விடுமுறைக்கே வெளியூர்களுக்கு செல்ல தொடங்கியிருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொரோனா தாக்கம் இன்னும் சற்றும் குறையாமல் அதிகரித்து வரும் நிலையில், மக்களின் இதுபோன்ற இடம்பெயர்வுகள் மேலும் நோய் தொற்றை அதிகரிக்கவே செய்யும் என்று மருத்துவ நிபுணர்களும் எச்சரித்துள்ளனர்.

Related Stories:

>