×

ஆவடி அருகே சிட்கோ தொழிற்பேட்டை குடோனில் கன்டெய்னர் லாரியில் பதுக்கிய 2 கோடி மதிப்பு குட்கா பறிமுதல்: 3 பேர் கைது

முக்கிய குற்றவாளிக்கு வலை

சென்னை: ஆவடி அருகே சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தனியார் குடோனில் கன்டெய்னர் லாரிகளில் பதுக்கி வைத்திருந்த 15 டன் எடையுள்ள குட்கா பொருட்களை குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக குடோனின் மேற்பார்வையாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வடசென்னை கூடுதல் கமிஷனர் அருண் தலைமையில் கஞ்சா மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக ஏராளமான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

சென்னை போலீசார் கஞ்சா பறிமுதல் செய்து வருவதால், தமிழக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு நெருக்கடி அதிகரித்தது. கீழ்மட்ட அதிகாரிகளை கூடுதல் டிஜிபி ஷகீல் அக்தர், கேள்விகள் மேல் கேள்விகளை கேட்க ஆரம்பித்தார். அதிகாரிகளுக்கு மெமோ கொடுத்தார். இதனால் தமிழக போதைப் பொருள் தடுப்புப் பிரிவிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், ஆவடி அடுத்த காட்டூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தனியார் குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாநில குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, நேற்று அதிகாலை டி.எஸ்.பி குமரன் தலைமையில் போலீசார் அங்கு சென்று மறைந்து இருந்து கண்காணித்தனர். அப்போது, அங்கு உள்ள ஒரு குடோனில் கன்டெய்னர் லாரிகள், மினி லாரிகள் நிறுத்தப்பட்டு ஆட்கள் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. பின்னர், போலீசார் குடோனுக்குள்  அதிரடியாக புகுந்து சோதனை செய்தனர். அப்போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  கன்டெய்னர் லாரிகள், மினி லாரிகளில் மூட்டை, மூட்டையாக குட்கா இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, போலீசார் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த அனைத்து லாரிகளையும் சோதனையிட்டனர். அப்போது, லாரிகளில் 15 டன் எடையுள்ள குட்கா  இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, போலீசார் 2 கன்டெய்னர் லாரிகள், 3 மினி லாரிகளுடன் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ₹2 கோடி என போலீசார் தெரிவித்தனர்.  மேலும், புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடோன் மேற்பார்வையாளர் காரனோடை,  புற்றுக்கோயில் தெருவைச் சார்ந்த பாலாஜி (27) மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தை சார்ந்த ரஞ்சித் குமார் யாதவ் (27), பாபுலால் யாதவ் (40) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘கர்நாடக மாநிலத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்களை கொண்டு வருவது போல் ஸ்டிக்கர் ஒட்டி, தற்போது ஊரடங்கு காலத்தில் கன்டெய்னர் லாரிகளில் வாகன எண்ணை மாற்றி குட்காவை  கடத்தி வந்து உள்ளனர். பின்னர், அவைகளை காட்டூர் குடோனில் பதுக்கி வைத்துள்ளனர்.

மேலும், இங்கிருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு மினி லாரிகள் மூலம் குட்காவை கடத்தி சென்று, கடைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். இந்த கடத்தலில் முக்கிய புள்ளியாக  குடோன் உரிமையாளரான சென்னை காரனோடையை சேர்ந்த முருகன் என்பவர் செயல்பட்டு வந்துள்ளார். இவர், ஏற்கனவே செங்குன்றம் பகுதியில் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர், அவர் இடத்தை மாற்றி குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்து உள்ளார். இதனையடுத்து, தலைமறைவாகியுள்ள முக்கிய குற்றவாளியான முருகனை வலைவீசி தேடி வருகிறோம்’’ என்றனர்.

Tags : Avadi ,Sitko Industrial Estate ,CIDCO Industrial Estate , Avadi, CIDCO Industrial Estate, Container Lorry, Gutka Seizure, 3 Arrested
× RELATED பரோட்டா சாப்பிட்ட தொழிலாளி மூச்சு திணறி பரிதாப சாவு: ஆவடி அருகே சோகம்