×

தேனி மாவட்டத்தில் வறண்டு கிடக்கும் கண்மாய்கள்: விவசாயிகள் கவலை

தேனி: தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி எழுபது நாட்களுக்கு மேல் ஆகியும் கண்மாய்கள் நிரம்பவில்லை. இந்த ஆண்டு வைகை நதியே வறண்டு தான் கிடக்கிறது. இதனால் விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர். தேனி மாவட்டத்தில் மே மாதம் கடைசி வாரம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. மாவட்டத்தில் பரவலாக துாறல் விழுந்து கொண்டே இருந்தது. முல்லை பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதிகள், குமுளி, கூடலுார், கம்பம் உத்தமபாளையம் வரை ஓரளவு நல்ல மழை கிடைத்தது. சின்னமனுார், தேனி, போடி, பெரியகுளம், ஆண்டிபட்டி பகுதிகளில் சொல்லிக்கொள்ளும் படியாக மழைப்பொழிவு இல்லை.

ஆனால் இப்பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்து மிதமான பருவநிலை காணப்பட்டது. அவ்வப்போது பலன் இல்லாத சிறு துாறல் மற்றும் சாரல் மட்டுமே பெய்தது. குறிப்பாக வீரப்ப அய்யனார் கோயில் பகுதியில் பெய்யும் மழையால் மீறு சமுத்திம் கண்மாய், சிகு ஓடை கண்மாய் உள்ளிட்ட தேனியை சுற்றி உள்ள பல கண்மாய்கள் நிரம்பும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை எந்த கண்மாயும் நிரம்பவில்லை. குறிப்பாக முல்லை பெரியாறு தண்ணீர் மூலம் நிரம்பும் கண்மாய்கள் தவிர மாவட்டத்தில் வேறு எந்த கண்மாய்களும் இதுவரை தண்ணீர் வரத்து இ்ல்லாமல் வறண்டே கிடக்கின்றன. குறிப்பாக இந்த ஆண்டு மேகமலை வனப்பகுதியிலும் மழை அளவு குறைவாகவே பெய்தது.

இதன் விளைவு வகை நதியும் இதுவரை வறண்டு கிடக்கிறது. இந்த மழையால் மானவாரி சாகுபடி பயிர்களுக்கு ஓரளவு பலன் இருந்தாலும், நிலத்தடி நீர் மட்டம்் உயர இந்த மழை போதவில்லை என தேனி மாவட்ட விவசாயிகள் மிகவும் வருத்தத்துடன் காணப்படுகின்றனர். செப்டம்பர் கடைசி வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கும். குறிப்பாக தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழைக்காலத்தில் தான் மழைப்பொழிவு இருக்கும். இந்த மழையில் மாவட்டத்தில் உள்ள அணைகள், கண்மாய்கள் நிரம்பும் என வேளாண்மைத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Tags : district ,Drought ,Theni , Theni, dry eyelids, farmers
× RELATED தேனி மாவட்டம் சுருளி அருவியில் தொடர்ந்து 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு