×

நிவாரண நிதி வழங்கக் கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் மீது வழக்கு தொடர சிஐடியு தொழிலாளர் சங்கம் முடிவு

திருச்சி: கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக வேலையின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு நிவாரண நிதி வழங்கக் கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என்று சிஐடியு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 5 மாதங்களாக தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் அதன் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஊதியமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வேலையின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அரசு சார்பில் மாதம் ரூ.10 ஆயிரம் வீதமும், தனியார் பேருந்து உரிமையாளர்கள் மூலம் மாதம் ரூ.5,000 வீதம் வழங்க வேண்டும் என்று தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் தொழிலாளர் நலச் சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி சிஐடியு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்துடன் இணைந்து திருச்சியில் பல்வேறு தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் இருந்து நிவாரணம் பெற்றுத் தருவதாக தொழிலாளர் நலத்துறையில் உறுதி அளித்திருந்தனர். ஆனால் இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை. இதுவரை பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும் பலன் இல்லாததால், நிவாரண நிதி வழங்கக் கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக சிஐடியு தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.



Tags : CITU ,union ,bus owners ,owners ,Corona , Corona, private bus, owners, case
× RELATED அதானிக்கு பினாமி மோடி, மோடிக்கு பினாமி...