×

விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்த உயர்நீதிமன்ற கிளை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

புதுடெல்லி:  விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க கூடாது என்றும் ஊர்வலமாக எடுத்துச் செல்லக்கூடாது என்றும் தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பாஜக மற்றும் இந்து முன்னணி கட்சி எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அனுமதி கோரி நீதிமன்றத்தில் பல தரப்பினர் வழக்குத் தொடர்ந்தனர்.

ஆனால் தமிழக அரசின் முடிவு சரியானது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், தளர்வுகள் கொடுக்க முடியுமா என கேள்வி எழுப்பினர். அதற்கு இன்று பதில் அளித்த தமிழக அரசு, விநாயகர் சதுர்த்திக்கு தளர்வுகள் ஏதும் இல்லை என்றும் மக்கள் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. மேலும், தனிநபர்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் மெரினா கடற்கரை தவிர மற்ற நீர்நிலைகளில் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ராமசாமி தாக்கல் செய்துள்ள இந்த மேல்முறையீட்டு மனுவில், பொது இடங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த தடை விதித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளார். இந்த மனுவை அவசரமாக பட்டியலிட கோரி மனுதாரர் தரப்பினர் முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விடிந்தால் விநாயகர் சதுர்த்தி என்ற நிலையில் அவசர வழக்காக இரவோடு இரவாக இந்த மனு விசாரிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Tags : High Court ,Supreme Court ,Ganesha ,procession ,statue procession , Ganesha Chaturthi, Procession, High Court Branch, Supreme Court, Appeal
× RELATED மாற்றுத்திறனாளி வீரருக்கு அரசு...