×

தெலுங்கானா மாநில கவர்னரா, பாரதிய ஜனதா கட்சி தலைவரா என்ற சந்தேகம்: தமிழிசை குறித்து டி.ஆர்.எஸ். எம்எல்ஏ சர்ச்சை ட்விட்...!!!

ஐதராபாத்: தமிழகத்தில் பாஜக மாநில தலைவராக இருந்து தெலுங்கானா கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்திரராஜன் மாநில கவர்னரா, பாஜ., தலைவரா என சந்தேகம் எழுவதாக சர்ச்சைக்குரிய வகையில் டி.ஆர்.எஸ் கட்சி எம்.எல்.ஏ டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தெலுங்கானாவில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்தாலும் சோதனைகள் மிக பொறுமையாக நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில், அம்மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‛கொரோனாவை கட்டுப்படுத்துவதில் டி.ஆர்.எஸ் அரசு மெத்தனமாக செயல்படுகிறது. இதுகுறித்து அரசுக்கு 5, 6 முறை கடிதம் எழுதியும் எந்தப் பலனும் இல்லை. கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பது என்பது தெலுங்கானா அரசுக்கு சுமையாக மாறி விட்டதோ என தோன்றுகிறது. முதல்வர் சந்திரசேகர ராவிடம் இதுகுறித்து பேசும் போது சற்று காட்டமாகவே கூறியுள்ளேன், என பேட்டியளித்தார். இது தெலுங்கானா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  தமிழிசையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஹூசுர்நகர் தொகுதி எம்எல்ஏ சைதி ரெட்டி, டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: நாட்டின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, கிராமங்களில் கூட அதிகளவில் சோதனைகள் மேற்கொள்ளப்படுவது தெலுங்கானா மாநிலத்தில் தான். முதல்வர் சந்திரசேகர ராவ் மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்களை மற்ற மாநிலங்களை அச்சிடு அடிக்கின்றன. மற்ற மாநிலங்களுக்கு நமது முதல்வர் முன் உதாரணமாக திகழ்கிறார். இதில் ஆளுநர் தமிழிசையின் கருத்தை பார்க்கும்போது, அவர் தெலுங்கானா மாநில கவர்னரா, பாரதிய ஜனதா கட்சி தலைவரா என்ற சந்தேகம் எழுகிறது என்று அவர் பதிவிட்டிருந்தார்.

இந்த டுவிட்டர் பதிவு, தெலுங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித்தலைமையின் உத்தரவுப்படி, சைதி ரெட்டி, அந்த டுவிட்டர் பதிவை நீக்கிவிட்டார். டிஆர்எஸ் கட்சியின் இந்த உத்தரவுக்கு அம்மாநில பாஜ., கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : state governor ,BJP ,DRS ,Telangana ,MLA ,Tamil , Telangana ,, Bharatiya Janata Party, Tamil Music, DRS MLA
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...