×

சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் நிலவை 4,400 முறை சுற்றியுள்ளது: மேலும் 7 ஆண்டுகள் செயல்படும் என இஸ்ரோ தகவல்

பெங்களூரு: சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் நிலவை 4,400 முறை சுற்றியுள்ளதாகவும், அது மேலும் 7 ஆண்டுகளுக்குச் செயல்படும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான் 2 விண்கலம் கடந்த ஆண்டு ஜூலை 22ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

ஸ்ரீஹரிக்கோட்டா விண்வெளி மையத்தில் இருந்து 2019, ஜூலை 22 அன்று நிலாவை நோக்கி ஜி.எஸ்.எல்.வி மார்க் III ஏவுகலன் மூலம் ஏவப்பட்டது. இவ்விண்கலத்தில் நிலா சுற்றுக்கலன், தரையிறங்கி, தரையுலவி ஆகியன உள்ளடங்கியிருந்தன. இவை அனைத்தும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டன.

சில்லுகளுடனான உலாவி நிலாவின் மேற்பரப்பில் வேதிப்பகுப்பாய்வை 14 நாட்களுக்கு மேற்கொள்ளுமாறும், தான் திரட்டிய தரவுகளை சுற்றுக்கலன் மற்றும் தரையிறங்கியூடாக புவிக்கு அனுப்புமாறும் திட்டமிடப்பட்டிருந்தது. சுற்றுக்கலன் ஒரு ஆண்டு காலம் நிலாவைச் சுற்றி 100 X 100 கிமீ சுற்றுவட்டத்தில் சுற்றிவந்து தனது பணிகளை மேற்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

2019 செப்டம்பர் 7ல் நிலாவில் மேட்டுச்சமவெளியில் சந்திரயான்-2 இன் தரையிறங்கியும், உலாவியும் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தரையிறங்கியை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கம் செய்ய இயலவில்லை.

நிலவில் இறங்கும் முயற்சியின்போது அதன் விக்ரம் லேண்டர் தரையில் மோதிச் சேதமடைந்தது. விண்கலத்தின் ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவை வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. இந்த ஆர்பிட்டர் இதுவரை நாலாயிரத்து நானூறு முறை நிலவைச் சுற்றிவந்துள்ளதாகவும், இவ்வாறு ஏழாண்டுகள் சுற்றுவதற்கான எரிபொருள் அதில் உள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஆர்பிட்டரில் உள்ள கேமராக்கள் மூலம் நிலவின் ஆயிரத்து 56 சதுரக் கிலோமீட்டர் நிலப்பரப்பு படம்பிடிக்கப்பட்டுள்ளது. அடுத்த முறை விண்கலம் அனுப்பினால் தரையிறங்கப் பாதுகாப்பான பகுதி எது என அடையாளம் காண இந்தப் படங்கள் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : ISRO ,moon , Chandrayan 2, ISRO
× RELATED நாளை விண்ணில் பாய்வதாக இருந்த...