காவலரை வெட்டிய ரவுடி சங்கரை போலீசார் 3 முறை துப்பாக்கியால் சுட்டனர்..: என்கவுண்டர் குறித்து சென்னை காவல் ஆணையர் விளக்கம்

சென்னை: சென்னை அயனாவரம் ரவுடி சங்கரின் என்கவுண்டர் குறித்து சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் விளக்கமளித்துள்ளார். முன்னதாக, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை என பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்பட்ட ரவுடி சங்கர், சென்னை அயனாவரத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் ரவுடி சங்கரை அயனாவரத்தில் சுற்றி வளைத்தனர். தொடர்ந்து, சங்கரை போலீசார் கைது செய்ய முயன்றபோது, காவலர் முபராக்-ஐ ரவுடி சங்கர் அரிவாளால் தாக்கியதால், காவலர் படுகாயமடைந்தார். இதனையடுத்து, தங்களை பாதுகாத்துக்கொள்ள ரவுடி சங்கரை ஆய்வாளர் நடராஜன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தார். சுட்டுக்கொல்லப்பட்ட சங்கர் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ரவுடி சங்கர் வெட்டியதால் படுகாயமடைந்த காவலர் முபராக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் சென்னை அயனாவரம் என்கவுண்டர் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த சங்கர், அயனாவரம் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு காவல் அதிகாரிகள் விரைந்த நிலையில், காவல் அதிகாரியிடம் இருந்து தப்பிக்க சங்கர் முயற்சி செய்தார். இதற்காக காவல் அதிகாரி முபாரக் என்பவரை அரிவாளால் வெட்டினார். அரிவாளை கீழே போடக்கூறி காவல் துறையினர் எச்சரித்தனர். ஆனால், அவர் தொடர்ந்து கொலை முயற்சியில் ஈடுபட்டதால், வேறு வழியின்றி காவல் துறையினர் என்கவுண்டர் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ரவுடி சங்கர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன, 4 கொலை முயற்சி வழக்குகள் உள்ள நிலையில் 9 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் ஆவார். என்கவுண்டர் குறித்து நீதி விசாரணைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவலரை வெட்டிய ரவுடி சங்கரை போலீசார் 3 முறை துப்பாக்கியால் சுட்டனர். இது தொடர்பான பிற விசாரணைகள் நடைபெற்று வருகிறது, என விளக்கமளித்துள்ளார்.

Related Stories: