×

திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ கழிவுகளை எரிப்பதால் நோய் பரவும் அபாயம்

திருவாரூர் : திருவாரூர் கலெக்டர் அலுவலகம் பின்புறத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் இந்த மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருவதால் பாதுகாப்பு கருதி மருத்துவமனைக்கு வருவதை பிற நோயாளிகள் தவிர்த்து வருகின்றனர்.மேலும் மருத்துவ கழிவுகளை கையாளுவதற்கு என தனியாக விதிமுறைகள் அமலில் இருந்துவரும் நிலையில் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை என பெரும்பாலான மருத்துவமனைகள் இதனை சரிவர பின்பற்றாமல் வழக்கமாக கொட்டப்படும் குப்பைகளோடு சேர்த்து கொட்டப்படும் நிலை இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது கொரோனாவை கருத்தில்கொண்டு மருத்துவ கழிவுகளை கையாளும் விதம் குறித்து மத்திய ,மாநில அரசுகள் கடுமையான உத்தரவுகளை தெரிவித்துள்ளன. இந்நிலையில் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேகரிக்கப்படும் கழிவுகள் அனைத்தும் அந்த வளாகத்தின் பின்புறத்தில் இருந்து வரும் பிணவறை அருகே ஊழியர்கள் மூலம் தீயிட்டு கொளுத்தப்படும் நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக தொற்றுநோய் பரவும் அபாயம் மட்டுமின்றி அருகில் இருந்து வரும் கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம் உட்பட அனைத்து அலுவலகங்களுக்கும் புகைமூட்டம் ஏற்படும் நிலையும் இருந்து வருகிறது.

இது குறித்து மருத்துவமனையின்டீன் முத்துக்குமரனிடம் கேட்டபோது, ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக இடைப்பட்ட காலத்தில் மருத்துவ கழிவுகள் கொடுக்கப்படுவது இல்லாமல் இருந்து வருகின்றது. இந்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் வரும் காலங்களில் இது போன்ற ஒரு சம்பவம் நடைபெறாது என்று முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

Tags : premises ,Thiruvarur Medical College Hospital ,Thiruvarur Government Medical College , Thiruvarur ,Government Medical College ,medical waste
× RELATED திருவாரூர் பெண் டாக்டர் காய்ச்சலால்...