காளிங்கராயன் வாய்க்காலில் கொட்டப்படும் அலுமினிய கழிவுகள்

*அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ஈரோடு :  ஈரோடு காளிங்கராயன் வாய்க்காலில் கொட்டப்பட்ட அலுமினிய கழிவுகளால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என கேள்வி எழுந்துள்ளது.   ஈரோடு மாநகராட்சியில் குடிநீர் ஆதாரமாக காவிரி ஆறு விளங்கி வருகிறது. காவிரி ஆற்றின் சுற்றுப்புற பகுதிகளிலும், காளிங்கராயன் பாசன வாய்க்காலின் சுற்றுப்புற பகுதிகளிலும் 100க்கும் மேற்பட்ட சாய, சலவை, தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் கழிவு நீரை ஓடைகளிலும், பாசன வாய்க்கால்களிலும், ஆறுகளிலும் நேரடியாக வெளியேற்றி வந்தனர்.

இதனால், காவிரி ஆறு முழுவதும் மாசுபட்டு, குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து காவிரி ஆறு மாசுபடுவது குறித்து வழக்குப்பதிவு செய்தது. மேலும், காவிரி மாசுபடுவது குறித்து ஈரோடு, நாமக்கல் கலெக்டர்கள் நேரடியாக ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதன்பேரில், ஈரோடு காவிரி ஆற்றில் கலெக்டர் தலைமையில் அடங்கிய குழுவினர் திடீர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், அவ்வப்போது, ஈரோடு மாநகரில் சுத்திகரிப்பு செய்யாமல் கழிவு நீரை வெளியேற்றும் சாய, சலவை, தோல் தொழிற்சாலைகளின் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின் இணைப்பினை துண்டித்து வந்தனர். இந்நிலையில், ஈரோடு சுண்ணாம்பு ஓடை பகுதியில் ஓடும் காளிங்கராயன் பாசன வாய்க்காலில் நேற்று மதியம் அலுமினிய தொழிற்சாலையின் திட, திரவ கழிவுகளை மர்மநபர்கள் லாரியில் கொண்டு வந்து கொட்டி சென்றுள்ளனர். இதனால் வாய்க்காலில் செல்லும் நீர் முற்றிலும் அலுமினிய கழிவுகளாக காணப்பட்டது.

மேலும் கால்நடைகளும், நீர் வாழ் உயிரினங்களும், விவசாய நிலங்களும் பாதிப்படையும் அபாய நிலை உருவாகி உள்ளது. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:  ஈரோடு மாநகரில் அலுமினிய தொழிற்சாலைகள் சொற்ப அளவில்தான் இயங்கி வருகிறது. அந்த ஆலைகளில் இருந்துதான் கழிவுகளை கொண்டு வந்து கொட்டி சென்றுள்ளனர். அலுமினிய கழிவால், நீரின் தன்மை மாறி வாய்க்காலில் குளிப்பவர்கள் உடலில் அரிப்பு ஏற்படும்.  விவசாய நிலங்கள் பாதிப்படையும். இந்த கழிவால் நீர்வாழ் உயிரினங்களான மீன்கள், தவளை முதலில் உயிரிழக்கும். எனவே மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆலைகளுக்கு சாதகமாக செயல்படாமல், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

Related Stories:

>