×

இ-பாஸ் தளர்வு எதிரொலி வெல்ல மார்க்கெட்டில் குவிந்த வியாபாரிகள்

ஈரோடு : இ-பாஸ் தளர்வு எதிரொலியால் சித்தோடு வெல்ல மார்க்கெட்டில் வெளி மாவட்ட, மாநில வியாபாரிகள் அதிகளவில் குவிந்தனர். ஈரோடு மாவட்டத்தில் கரும்பாலைகளில் உற்பத்தி செய்யப்படும் உருண்டை வெல்லம், அச்சுவெல்லம், நாட்டுச்சர்க்கரை 30 கிலோ மூட்டைகளாக ஈரோடு அருகே உள்ள சித்தோடு வெல்ல மார்க்கெட்டில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும். இந்த ஏலத்தில் ஈரோடு மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகளும், வெளி மாநில வியாபாரிகளும் அதிகளவில் வந்து வெல்லங்களை கொள்முதல் செய்வர். ஆனால், கொரோனா ஊரடங்காலும், இ-பாஸ் கெடுபிடியாலும் கடந்த சில மாதங்களாக வெல்ல மார்க்கெட்டில் வெளி மாவட்ட, மாநில வியாபாரிகள் வருகை குறைந்து காணப்பட்டது.

  இந்நிலையில், இ-பாஸ் தளர்வால், சித்தோடு வெல்ல மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் வெளி மாவட்ட, மாநில வியாபாரிகள் அதிகளவில் கலந்து கொண்டு வெல்லத்தை கொள்முதல் செய்து சென்றனர். இது குறித்து வெல்ல மார்க்கெட் நிர்வாகிகள் கூறியதாவது:  இந்த வாரம் கூடிய மார்க்கெட்டில் நாட்டு சர்க்கரை 2,500 மூட்டையும், அச்சுவெல்லம் 800 மூட்டையும், உருண்டை வெல்லம் 6 ஆயிரம் மூட்டையும் வரத்தானது. நாட்டுசர்க்கரை மூட்டை ரூ.1,250 முதல் ரூ.1,310 வரையிலும், அச்சுவெல்லம் ரூ.1,230 முதல் ரூ.1,300 வரையிலும், உருண்டை வெல்லம் ரூ.1,250 முதல் ரூ.1,330 வரையிலும் விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், நாட்டு சர்க்கரை மூட்டைக்கு ரூ.30 வரை அதிகரித்தும், அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் கிலோவுக்கு ரூ.2 வீதம் விலை குறைந்து விற்பனையானது.

இ-பாஸ் தளர்வால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் வழக்கத்தைவிட அதிகளவில் வந்திருந்தனர். இதனால், விற்பனையும் விறுவிறுப்பாக நடந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Merchants ,EPASS Relaxation Merchants Grouped , erode, EPass, Merchants ,Sugarcane ,EPASS Relaxation
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...