சென்னையை அடுத்த ஆவடியில் ரூ. 2 கோடி மதிப்புள்ள 25 டன் குட்கா பறிமுதல்!: குடோன் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது..போலீசார் அதிரடி..!!

சென்னை: சென்னையை அடுத்த ஆவடியில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிகளின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழகம் முழுவதும் குட்காக்கள் பதுக்கி வைத்திருக்கும் கும்பல் அதனை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறது. குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் குட்கா, பான் மசாலா போன்ற பொருட்கள் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

 அவ்வப்போது காவல்துறையினர் நடத்தும் வாகன சோதனையில் சிறிய அளவிலான குட்கா சிக்குவது வழக்கம். ஆனால் எங்கிருந்து இந்த குட்கா பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது என்பதை கண்டுபிடிப்பது காவல்துறையினருக்கு பெரிய சவாலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை ஆவடி அருகே காட்டூரில் தொழிற்பேட்டையில் உள்ள குடோன் ஒன்றில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, டி.எஸ்.பி. குமரன் தலைமையிலான போலீசார், இன்று அந்த கிடங்கில் திடீரென சோதனை நடத்தினர்.

அப்போது அந்த குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கண்டெய்னர்  லாரி, 3 மினி லாரிகளில் முழுவதும் பண்டல், பண்டலாக குட்கா இருந்துள்ளது. சுமார் 25 டன் எடையுள்ள இந்த குட்கா பொருட்கள் 2 கோடி ரூபாய் மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து குட்காவை பறிமுதல் செய்திருக்கும் அதிகாரிகள், குடோன் உரிமையாளர் பாலாஜி உட்பட 3 பேரை கைது செய்தனர். குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த முருகன் என்பவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories:

>