×

தோனியை தொடர்ந்து ரெய்னாவுக்கு வாழ்த்து மடல் அனுப்பிய பிரதமர் மோடி..: கிரிக்கெட்டை உயிர்மூச்சாக கொண்டீர்கள் என புகழாரம்!

புதுடெல்லி: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற தோனி கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று அறிவித்தார். தோனியின் இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சில நிமிடங்களில் சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது கூடுதல் வருத்தத்தை உண்டாக்கியது. இதையடுத்து தோனி, சுரேஷ் ரெய்னா ஓய்வு குறித்து பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். அந்த வகையில், பிரதமர் மோடி, எம்ஸ்.தோனி அவர்களுக்கு வாழ்த்து மடல் அனுப்பி பாராட்டுகளை தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தோனியை தொடர்ந்து ஓய்வுபெற்ற சுரேஷ் ரெய்னாவையும் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். அதில், கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எடுத்தது உறுதியாக கடினமான முடிவுகளில் ஒன்றுதான்.

ஆனால், நீங்கள் ஒய்வு பெற்றுவீட்டீர்கள் எனும் வார்த்தையை நான் பயன்படுத்தமாட்டேன். ஏனென்றால், இன்னும் நீங்கள் மிகவும் இளமையாகவும், உற்சாகம் நிரம்பியவராகவும் இருக்கிறீர்கள். ஆக்கப்பூர்வமான கிரிக்கெட் இன்னிங்ஸிக்குப்பின் வாழ்வின் அடுத்த இன்னிங்ஸுக்கு தயாராகிறீர்கள். நீங்கள் கிரிக்கெட்டுக்காகவே வாழ்ந்தீர்கள், அதையே உயிர்மூச்சாகக் கொண்டீர்கள். லக்னோவின் மைதானங்களிலும், முர்தாநகர் தெருக்களிலும் இருந்தே உங்களின் இளமை கால கிரிக்கெட் ஆர்வம் தொடங்கிவிட்டது. மிகச்சிறந்த பயணமாக உங்களுக்கு கிரிக்கெட் வாழ்க்கை அமைந்திருக்கிறது, உங்களுக்கு கிடைத்த மிகச்சிறந்த கவுரவமாக, இந்திய அணிக்காக மூன்று வகையானப் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளீர்கள்.

பொதுவாக நீங்கள் சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்லாமல், சிறந்த பந்துவீச்சாளராகவும், சில நேரங்களில் அணிக்கு தேவைப்படும்போது கேப்டனாகவும் செயல்பட்டுள்ளீர்கள். மைதானத்தில் உங்களின் பீல்டிங் மிக்சிறப்பாகவும், ஊக்கமளிப்பதாகவும் இருந்தது. சர்வதேச கிரி்க்கெட்டில் மிகச்சிறந்த கேட்ச்சுகளை பிடித்தவர்கள் வரிசையில் நீங்கள் தடம் பதித்து இருக்கிறீர்கள். களத்தில் பீல்டிங்கின்போது, மிகவும் விழிப்பாக இருந்து அணிக்காக சேமித்த ரன்களை கணக்கிடுவதற்கு நாட்கள் தேவைப்படும். ஒரு பேட்ஸ்மேனாக கிரிக்கெட்டின் அனைத்துப் பிரிவுகளிலும் ஜொலித்துள்ளீர்கள். குறிப்பாக டி20 கிரிக்கெட் போட்டியில் உங்கள் பேட்டிங் திறமை சிறப்புக்குரியது.

கடந்த 2011ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் உங்களின் பங்களிப்பை மறக்க முடியாது. அகமதாபாத்தில் உள்ள மொடீரா கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த காலிறுதி ஆட்டத்தில் உங்களின் சிறப்பான பேட்டிங்கை கண்டு வியந்தேன். இந்திய அணியின் உலகக் கோப்பை வெற்றிக்கு அன்று உங்களின் இன்னிங்ஸ் முக்கியமானது. நான் உறுதியாகச் சொல்கிறேன், உங்கள் ரசிகர்கள் நீங்கள் அடிக்கும் கவர் டிரைவ் ஷாட்டை இனிமேல் வாழ்க்கையில் தவறவிடுவார்கள். உங்களின் அந்த ஆட்டத்தை நான் பார்த்தது அதிர்ஷ்டம்தான். விளையாட்டு வீரர்கள் விரும்பப்படுவது அவர்கள் களத்தில் நடந்து கொள்ளும் நடத்தையினால் மட்டுமல்ல களத்துக்கு வெளியே எதார்த்த வாழ்க்கையிலும் அவர்களின் நடத்தை மதிப்பிடப்படுகிறது. உங்களின் போராடும் குணம் பல இளைஞர்களுக்கு உந்து சக்தியாக திகழ்கிறது.

உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையில் சில நேரங்களில் காயம், வலி போன்ற பின்னடைவுகளைச் சந்தித்து இருந்தாலும் அந்த அனைத்து சவால்களையும் மீறி மேலே வந்துள்ளீர்கள். அணியின் உற்சாகம், உத்வேகத்துக்கு அர்த்தம் உள்ளவராக ரெய்னா எப்போதும் திகழ்வார். உங்களின் தனிப்பட்ட கிரிக்கெட் வாழ்க்கை மேம்பாட்டுக்காக மட்டும் விளையாடவில்லை, இந்திய அணிக்காகவும், தேசத்துக்காகவும் விளையாடியுள்ளீர்கள். மைதானத்தில் உற்சாகம் அளப்பரியது. எதிரணி யாரேனும் விக்கெட்டை இழந்தால் அதனால் உற்சாகம் அடைந்து மகிழ்ச்சியோடு ஆர்ப்பரிக்கும் முதல்வீரர் நீங்கள்தான் என்பதை பார்த்திருக்கிறோம். சமூகத்துக்கான உங்களின் அக்கறை, கருணை பல்வேறு தருணங்களில் வெளிப்பட்டுள்ளது.

மகளிர்மேம்பாடு, அதிகாரமளித்தல், ஸ்வச் பாரத் ஆகியவற்றில் ஆத்மார்த்தமாக ஆதரவு அளித்துள்ளீர்கள். இந்தியக் கலாச்சாரத்தோடு நீ்ங்கள் கலந்திருப்பதையும், நாட்டின் மதிப்பு மிக்க விஷயங்களிலும், பாரம்பரியத்திலும் இளைஞர்கள் கலந்திருப்தை நினைத்து பெருமைப்படுகிறேன். அடுத்து உங்களுடைய 2வது இன்னிங்ஸ் வெற்றிகரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உங்கள் மனைவி பிரியங்கா,குழந்தைகள் கிரேஸியா, ரியோ ஆகியோருடன் மகிழ்ச்சியோடு காலத்தை செலவு செய்வீர்கள் என நம்புகிறேன். இளைஞர்களுக்கு உற்சாகம் ஊட்டியதற்கும், விளையாட்டில் இந்தியாவை முன்னணிப்படுத்த முயன்றதற்கும் நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன், என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags : Modi ,Dhoni ,Raina , Suresh Raina, Prime Minister Modi, congratulatory letter
× RELATED எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில்...