×

பக்தியும், பசுமையும் கலந்த முயற்சி வணங்கினால் விநாயகர் கரைத்தால் மரம், செடி

*விருதுநகரில் அசத்தல்

விருதுநகர் : தண்ணீரில் கரைத்த பிறகு மரம், செடிகளாக மாறும் விதை விநாயகர் சிலைகளை விருதுநகரை சேர்ந்த ஒருவர் தயாரித்து அசத்தியுள்ளார்.  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் மக்கள் வீடுகள், அலுவலகங்கள், வீதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். நாளை விநாயகர் சதுர்த்தி. கொரோனா தொற்று பரவலால், வீதிகளில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தி ஊர்வலமாக சென்று கரைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வைத்து வழிபட வேண்டுமென அரசு தெரிவித்துள்ளது.

விருதுநகர் அருகே குந்தலப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜன். பசுமை இந்தியா இயற்கை அங்காடி நடத்தி வருகிறார். இவர் வீட்டில் வைத்து வணங்கும் விநாயகர் சிலைகளில் புதுமையை புகுத்தி உள்ளார். இவர் தூய களிமண், இயற்கை உரம், விதைகளை உள்ளடக்கிய விநாயகர் சிலைகளை தயாரித்துள்ளார். சிலைகளில் செயற்கை வண்ணங்கள் பூசுவதில்லை. விநாயகர் சிலைகளுக்குள் விதைகளை கேப்ஸ்யூல்களில் வைத்து தயாரித்துள்ளார். இந்த சிலைகளை வழிபாட்டிற்கு பிறகு தொட்டிகளில் கரைத்து, தினமும் தண்ணீர் ஊற்றினால் விதைகள் வளரத்துவங்கும். 3, 6, 7, 9 மற்றும் 12 இஞ்ச் உயரத்திலான விநாயகர் சிலைகள் ரூ.30, ரூ.50, ரூ.75, ரூ.90, ரூ.100 விலையில் விற்பனை செய்கிறார். கத்திரி, வெண்டை, தக்காளி, சீனி அவரை உள்ளிட்ட காய்கறி, கீரை விதைகள், வேம்பு, நாவல், அகத்தி மர விதைகளை வைத்து சிலைகளை செய்கிறார். மக்கள் ஆர்வத்துடன் இந்த சிலைகளை வாங்கி செல்கின்றனர்.


Tags : Worship Ganesha ,plant ,Idol Which , Virdhunagar,vinayagar Idol,greenery plant,greenery Worship Vinayagar chathurthi
× RELATED மதுரை மாவட்டம் கள்ளிக்குடி உர ஆலையை...