கொரோனா தடுப்பூசி தயாரிப்பு விவகாரம்: திறன் கொண்ட நாடான இந்தியாவின் பங்களிப்பை எதிர்பார்ப்பதாக ரஷ்யா அறிவிப்பு

மாஸ்கோ: கொரோனா வைரஸ் தடுப்பூசி ஸ்பூட்னிக்-வி தயாரிப்புக்காக இந்தியாவுடன் கைகோர்க்க ரஷ்யா முன்வருவதாக தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டறிய உலக நாடுகள் பெரும் ஆர்வம் காட்டிவருகின்றன. ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கே வந்துள்ள இந்தப் பிரச்சினையை தீர்க்க பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. தடுப்பு மருந்து கண்டறிவதில் வெவ்வேறு கட்டங்களில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ரஷ்யா கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டறிந்துவிட்டோம் என அறிவித்தது. ஸ்பூட்னிக்-வி என்ற தடுப்பு மருந்து கொரோனாவை தடுக்கும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார். தனது மகளுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தி சோதித்துப் பார்த்ததாகவும் கூறினார்.

தடுப்பூசியின் மூன்றாம்கட்ட அல்லது இறுதிகட்ட பரிசோதனையில் பல்வேறு வயதைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரை ஈடுபடுத்த வேண்டும். அப்போதுதான் தடுப்பூசியின் வீரியமாக உள்ளதா, பக்கவிளைவுகள் இல்லாமல் இருக்கிறதா என்பதை பற்றியெல்லாம் அறிய முடியும் என்று சர்வதேச மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்தனர். ரஷ்யா இன்னும் அந்த சோதனையை மேற்கொள்ளவில்லை.  இந்த தடுப்பூசி ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (ஆர்.டி.ஐ.எஃப்) மற்றும் காமாலேயா ஆய்வு நிறுவனத்தின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரிய அளவில் உற்பத்தியில் மருந்து தயாரிப்பிற்காக இந்தியாவின் பங்களிப்பை ரஷ்யா எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பூசி ஸ்பூட்னிக் - வி தயாரிப்புக்காக இந்தியாவுடன் கைகோர்க்க ரஷ்யா முன்வருவதாக ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரில் ட்மிட்ரிவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கிரில் ட்மிட்ரிவ், லத்தீன், அமெரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் தடுப்பூசி தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. தற்போது தடுப்பூசி உற்பத்தி தான் மிக முக்கிய பிரச்சினையாக உள்ளது.  நாங்கள் இந்தியாவின் பங்களிப்பை எதிர்பாக்கிறோம்.  தடுப்பூசியை உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவிடமும் இருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். இது போன்ற நோய் தடுப்பு மருந்தினை பெருமளவு தயாரிப்பதில் இந்தியா நல்ல திறன் கொண்ட நாடாகும்.  இதில் சர்வதேச ஒத்துழைப்பை ரஷ்யா எதிர்நோக்கியுள்ளது, என்று கூறியுள்ளார். இந்தியாவுடன் நட்புறவில் இருக்கும் ரஷியாவிடம் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகுமா ? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக ஸ்பூட்னிக் வேக்சின் மருந்து குறித்த அடிப்படை விவரங்களை ரஷ்யாவிடம் இந்தியா கேட்டுள்ளதாகவும் அதற்கான தூதரக பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>