×

அரசு உத்தரவை மீறி குமுளூர் பெரிய ஏரியில் 20 அடிக்கு பள்ளம் தோண்டி மணல் கொள்ளை

*தனியாருக்கு துணை போகும் கனிம வளத்துறை அதிகாரி

திருச்சி : அரசு உத்தரவை மீறி குமுளூர் பெரிய ஏரியில் 20 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி தனியார் நிறுவனம் மண் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. தனியாருக்கு துணைபோகும் வகையில் எவ்வளவு ஆழம் வேண்டுமானாலும் தோண்டி மண் எடுக்கலாம் என்று கனிம வளத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். நீர் நிலைகளை பாதுகாக்க தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களையும் தூர்வார அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் நிதி பற்றாக்குறையால் சாலை அமைக்கும் பணி, விவசாயம் மற்றும் பொது பணிகளுக்கு ஏரி, குளங்களை தூர் வாரும் போது 5 அடி ஆழம் வரை மண் எடுக்க அரசால் அனுமதியளிக்கப்பட்டது. அதன்பேரில் ஏரி, குளங்களை தூர்வாரும்போது மணல் அள்ளி செல்லப்படுகிறது.

இந்நிலையில் திருச்சி- சிதம்பரம் நான்குவழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இதற்காக சாலை அமைக்கும் தனியார் நிறுவனம் சார்பில் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் 92 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரிய ஏரியில் இருந்து அரசு விதிகளை மீறி 20 அடிக்கு மேல் ஆழமாக பள்ளம் தோண்டி 5 பொக்லைன் இயந்திரம் உதவியுடன் 24 லாரிகளில் மண் அள்ளி செல்லப்படுகிறது. இதேபோல் பெருவளநல்லூர், தச்சங்குறிச்சி, வெள்ளனூர், கண்ணாக்குடி, ரெட்டிமாங்குடி, காணக்கிளியநல்லூர் உள்ளிட்ட 30 ஏரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறி மண் எடுத்து செல்லப்படுகிறது.

ஏரிகளை தூர்வாரி நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் நல்ல திட்டமாக இருந்தாலும் அளவுக்கு மீறி மண் எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறையும். ஏற்கனவே வறண்ட பகுதியான இப்பகுதியில் அளவுக்கு மீறி மண் எடுப்பதால் இந்த பகுதியின் விவசாயம் மற்றும் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தனியார் நிறுவனங்களுக்கு அரசு அதிகாரிகள் துணை போகக்கூடாது என பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதுபற்றி திருச்சி கனிமவள உதவி இயக்குனர் அண்ணாதுரையிடம் கேட்டதற்கு, எத்தனை அடி ஆழம் வேண்டுமானாலும் பள்ளம் தோண்டி மண் எடுத்து கொள்ளலாம். இதில் நிர்ணயிக்கப்பட்ட அளவு ஏதும் இல்லை. அரசிடம் போதிய நிதி இல்லாததால் சாலை அமைக்கும் தனியாருக்கு அனுமதி அளிக்கிறோம் என்றார். அப்போது நீங்கள் சொல்வதுபோல் ஏதாவது அரசு உத்தரவு உள்ளதா என்று மீண்டும் கேட்டதற்கு, நான் ஒரு போஸ்ட்மேன். எனக்கு தெரியாது. மாவட்ட நிர்வாகத்திடம் கேளுங்கள் என்றார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் கனிம வள உதவி இயக்குனர் அண்ணாதுரை, திருச்சி மாவட்டத்தில் கனிம வளத்தை தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்துள்ளார். இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக சமூகநல ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Tags : lake ,trichy , trichy,Great lake,sand ,Kumalur
× RELATED செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்இருப்பு...