×

ஒரு வாரமாக சாரல் இல்லாத நிலையிலும் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து

தென்காசி :   குற்றாலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சாரல் இல்லாத நிலையிலும் அருவிகளில் ஓரளவுக்கு தண்ணீர் விழுகிறது. குற்றாலத்தில் இந்த ஆண்டுக்கான சீசன் துவங்கியபோதும் கொரோனா ஊரடங்கால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் உள்ளிட்ட யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. ஜூன், ஜூலை மாதங்களில் ஒரு சில தினங்கள் மட்டுமே சாரல் பெய்து வந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் ஒன்றாம் தேதி முதல் பத்தாம் தேதி வரை குற்றாலத்தில் மழை நன்றாக பெய்தது. இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கடந்த 10ம் தேதிக்கு பிறகு மீண்டும் சாரல் மாயமானது. ஒரு வாரத்திற்கும் மேலாக சாரல் இல்லை. பகலில் லேசான வெயில் காணப்படுகிறது. மாலை  இதமான காற்று வீசுகிறது. தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக சாரல் இல்லாத நிலையிலும் அருவிகளில் ஓரளவு தண்ணீர் நன்றாக விழுகிறது  மெயினருவியில் ஆண்கள் பகுதியில் தண்ணீர் நன்றாகவும், பெண்கள் பகுதியில் சுமாராகவும் தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியிலும் ஓரளவு தண்ணீர் நன்றாக விழுகிறது. பழைய குற்றாலத்தில் சுமாராக தண்ணீர் விழுகிறது. இருப்பினும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உள்ளூர் பொதுமக்கள் உள்பட யாரையும் குளிக்க அனுமதிக்கவில்லை.  தடையை மீறி யாரும் அருவிப் பக்கம் செல்லாதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : drought ,Courtallam Falls , Water ,Courtallam,Falls , Main falls, Five Falls,Tenkasi
× RELATED வறட்சியை நோக்கி நகரும் பெங்களூரு.. தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி!!