×

படிப்படியாக திரும்பும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடைகளில் வாடிக்கையாளர் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது:

* ஆடி தள்ளுபடி ஆவணியிலும் தொடர்கிறது
* நஷ்டத்தை சரிகட்டும் முயற்சியில் வணிகர்கள் தீவிரம்

சென்னை: கொரோனாவால் ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டு வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளால் காற்று வாங்கிய கடைகளில் வாடிக்கையாளர்கள் வருகை அதிகரித்து வருகிறது. கொரோனா ஊரடங்கால். கோடிக்கணக்கில் முதலீடு செய்தவர்கள் எல்லாம் கண்கலங்கும் நிலமைக்கு தள்ளப்பட்டனர். ஒட்டுமொத்த வர்த்தகத்தையும் கொரோனா புரட்டி போட்டுவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒட்டுமொத்தமாக முடக்கப்பட்ட ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் கொண்டு வரப்பட்டன. அத்தியாவசிய கடைகளை தவிர அனைத்து வகையான வியாபாரமும் கடுமையான நஷ்டத்தை சந்தித்த நிலையில் இந்த தளர்வுகள் அவர்களுக்கு சற்று ஆறுதலை தந்தது. ஆனாலும் மக்கள் வெளியில் வர தயக்கம் காட்டியதால் பெரிய அளவில் வியாபாரம் இல்லை.

இதனால் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட கடைகள், வியாபார நிறுவனங்கள் எல்லாம் காற்று வாங்கியது. இந்த நிலையில், மேலும் பல தளர்வுகளை தமிழக அரசு தொடர்ந்து அறிவித்தது. இதனால் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், பல்வேறு விதமான பெரிய கடைகள், ஜவுளி கடைகள் எல்லாம் திறக்கப்பட்டன. இதனால் பணிகளில் சேர சொல்லி அந்தந்த நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு அழைப்பு விடுத்ததால் சொந்த ஊர்களுக்கு சென்ற பலர் நகர்ப்புறங்களுக்கு திரும்ப தொடங்கினர். இ-பாஸ் கிடைக்காமல் தவித்த நிலையில் அதிலும் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் சென்னைக்கு மட்டும் 22 ஆயிரம் பேர் வரை திரும்பியுள்ளனர். இதனால் சென்னை வேகமாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளது.

வேலைகளுக்கு செல்ல தொடங்கியிருப்பதால் மக்களிடம் வாங்கும் சக்தியும் அதிகரித்துள்ளது. மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க தொடங்கிவிட்டனர். கடந்த 5 மாதங்களாக புது துணிகள் கூட வாங்க முடியாமல் முடங்கி இருந்த மக்கள் இப்போது ஜவுளி கடைகளுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். இதனால் ஜவுளி வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. காரணம் பல ஜவுளி நிறுவனங்கள் ஆடி தள்ளுபடியை இந்த ஆவணி மாதத்தில் வழங்கி வருகிறது. 50 முதல் 70 சதவீதம் வரை தருகின்றனர். பாட்டா போன்ற கடைகளிலும் 50 பர்சென்ட் டிஸ்கவுன்ட் தருகின்றனர். தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வந்தாலும், நகைக் கடைகளில் நாளுக்கு நாள் வாடிக்கையாளர் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்து வருகிறது. ஓட்டல்களில் பார்சல் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 50 சதவீத அளவில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் முடங்கி இருந்த மக்கள் தற்போது பெரிய ஓட்டல்கள் முதல் ரோட்டோர கடைகள் வரை முற்றுகையிட தொடங்கிவிட்டனர். சென்னை மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களிலும் சகஜ நிலைக்கு திரும்பி வருவதால் கொரோனாவால் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ள வியாபாரம் தற்போது துளிர்விடத் தொடங்கியுள்ளது. இதனால் கடும் நஷ்டத்துக்குள்ளான வியாபாரிகள் கூட பழைய நிலைக்கு திரும்புவார்கள் என்பது வணிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து, ஓட்டல் உரிமையாளர் மணிகண்டன் கூறுகையில்,‘‘ மக்கள் நடமாட்டம் இல்லாததால் ஓட்டல் திறந்தும் வியாபாரம் இல்லாமல் தவித்து வந்தோம். கடை வாடகை கொடுக்க முடியாமலும், குடும்பத்தை நடத்த முடியாமலும் கடும் சிரமத்தை சந்தித்து வந்தோம்.

தற்போது 70 சதவீதம் அளவுக்கு இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டது என்றே கூறலாம். மக்கள் வெளியில் வரத் தொடங்கிவிட்டதால் ஓட்டல் மூலம் வருமானம் வரத் தொடங்கிவிட்டது’’ என்றார். ஜவுளிக் கடை உரிமையாளர் சம்சுதீன் கூறுகையில்,‘‘ஜவுளி கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கினாலும், வேலை இழப்பு போன்ற காரணங்களால் மக்கள் வருமானம் இல்லாமல் இருந்தனர். இதனால் ஜவுளி வியாபாரம் சூடு பிடிக்கவில்லை. இருக்கக்கூடிய ஸ்டாக்கை விற்றால் தான் புதிதாக வாங்க முடியும். விழி பிதுங்கி தவித்து வந்தோம். எந்த ஒரு சுப நிகழ்ச்சிகள், கோயில் விழாக்கள், பண்டிகைகள் எதுவும் கொண்டாடப்படாததால் புதிய ஆடைகள் யாரும் வாங்கவில்லை. தற்போது அதற்கெல்லாம் சேர்த்து இப்போது வாங்க தொடங்கியுள்ளனர். வாடிக்கையாளர்கள் வருகை அதிகரித்திருப்பது எங்களுக்கு ஓரளவு நம்பிக்கையை தந்துள்ளது’’ என்றார்.

Tags : stores ,customers , People, nature life, shop, customer attendance, increasing day by day
× RELATED 3 நாட்கள் விடுமுறை எதிரொலி; டாஸ்மாக்...