×

ஊரடங்கில் ஓசையின்றி நடந்த பெண் குழந்தை திருமணங்கள்: பாதியில் நின்றது படிப்பு… வறுமையால் ஏற்பட்ட முடிவு

சென்னை: கடந்த 2015-16 ல் தேசிய குடும்ப நல சர்வே நாடு முழுவதும் எடுக்கப்பட்டது. இதில் குழந்தை திருமணங்கள் கணிசமான அளவுக்கு குறைந்துள்ளதாகவும், இமாசல பிரதேசம், மணிப்பூரில் மட்டும் 15 வயது குழந்தைகள் சிலருக்கு திருமணம் நடந்துள்ளதாகவும் அந்த சர்வே தெரிவித்தது. குழந்தை திருமணங்கள் குறைந்திருந்தாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக அரங்கேறின. யாராவது ஒருவர் அரசுக்கு தகவல் கொடுத்து விடுவார்கள் என்ற பயமும் இருந்தது. தற்போது ஊரடங்கு குழந்தை திருமணங்களுக்கு மிக சாதகமான களத்தை அமைத்துக் கொடுத்து விட்டது என்றே கூறலாம்.

ஊரடங்கில் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 92,203 புகார்கள் வந்துள்ளன. இதில் 5,584 புகார்கள் குழந்தை திருமணங்கள் பற்றியவை. இந்த திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. கடந்த ஏப்ரலில் மட்டும் கர்நாடகாவில் 118 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன இதுபோல் தெலங்கானாவில் மூன்று மாதங்களில் 204, மகாராஷ்டிராவில் 80 திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 25ம் தேதி முதல் மே 11ம் தேதி வரை ஆந்திராவில் 165 குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலும் கூட குழந்தை திருமணங்கள் நடத்த முயன்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுபோல், பல்வேறு மாநிலங்களிலும் குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.குழந்தை திருமணங்கள் அதிகமாக நடப்பதற்கு முக்கிய காரணம் ஊரடங்குதான். கொரோனா பரவலுக்கு பிறகு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில், திருமண நிகழ்ச்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இது குழந்தை திருமணம் செய்வோருக்கு மிக சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்து விட்டது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். உதாரணமாக, மகாராஷ்டிராவில் 15 வயது பெண் குழந்தைக்கும், 50 வயது ஆணுக்கும் நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது.

தனது குழந்தைகளை பார்த்துக்கொள்ளவே இந்த சிறுமியை அந்த நபர் திருமணம் செய்ய முயன்றுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.கடந்த மார்ச் முதல் ஜூன் வரை மகாராஷ்டிராவில் குழந்தை திருமணம் தொடர்பாக சுமார் 200 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 90 சதவீத திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். ஊரடங்கால் பலர் வேலை பறிபோனதால் வருவாய் இழந்து திண்டாடுகின்றனர். இதுவும் குழந்தை திருமணங்களுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று. கிராமங்களில் வருவாய் இழந்த சிலர், தங்கள் பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், படிக்க வைக்கவும் வழியின்றி சற்று வசதியான குடும்பத்தை சேர்ந்தவருக்கு திருமணம் செய்து வைக்கும் சம்பவங்கள் சில இடங்களில் நடக்கின்றன. சிலர், தற்போதே திருமணம் செய்து வைத்தால் கடமை முடிந்து விடும் எனவும் கருதுகின்றனர். இருப்பினும், கொரோனா ஊரடங்கால் அதிகரித்துள்ள குழந்தை திருமணங்கள் பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.

* கரும்பு வெட்ட வந்த மாப்பிள்ளை
வரும் செப்டம்பரில் கரும்பு அறுவடை நடைபெறும். இதற்காக மகாராஷ்டிராவில் உள்ள பஞ்சாரா சமூகத்தினர், அந்த மாநிலத்தில் கரும்பு தோட்டம் உள்ள பகுதிகளுக்கு வேலைக்காக ஆறு மாதங்களுக்கு இடம் பெயர்வார்கள். இந்த புலம்பெயர் தொழிலாளர்கள், கரும்பு வெட்ட ஆள் வேண்டுமே என்பதற்காக, தங்கள் பெண் குழந்தைக்கு ஒரு வாலிபரை திருமணம் செய்து வைத்துவிடுவார்களாம். கரும்பு அறுவடை சீசன் நெருங்குவதால், இங்குள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பத்தில் குழந்தை திருமணங்கள் அரங்கேற வாய்ப்பு அதிகம் என சிலர் கவலை தெரிவிக்கின்றனர்.

* வரதட்சணை குறைந்தது செலவும் குறைந்தது
ஏழைகள் வறுமையால் குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு திருமணம் செய்து வைப்பது ஒருபுறம் இருக்க, செலவு குறைவு என்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. உதாரணமாக, சாதாரண நாட்களில் திருமணம் நடத்தினால், சாப்பாட்டுக்கே ரூ.2 லட்சம் ஆகிவிடும். ஊரடங்கின் கெடுபிடியால் இரு தரப்பு குடும்பங்கள் மட்டுமே இருக்கும் சாப்பாட்டு செலவு ரூ.20,000ல் முடிந்து விடும். இதுபோல், மராத்தா, லிங்காயத் போன்ற சமுதாயங்களில், மாப்பிள்ளை வீட்டார் குறைந்தது ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்பார்களாம். இது தற்போது ₹1 லட்சமாக குறைந்து விட்டது. தொழிலாளர் குடும்பமாக இருந்தால் வரதட்சணை ரூ.1 லட்சம். இது ரூ.20,000ஆக குறைந்து விட்டது. இதனால் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை 16 குழந்தை திருமணங்கள் புகார் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய 9 மாதங்களில் 19 திருமணங்கள் பற்றி புகார்கள் பதிவாகின என மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரில் உள்ள ஒருவர் தெரிவித்தார்.

Tags : half ,hitch , Silent in the curfew, girl child, marriages, half-stopped study, poverty
× RELATED வெண்டைக்காய் பருப்பு சாதம்