சுதந்திர தினத்தன்று அவமானப்படுத்தப்பட்ட ஊராட்சி தலைவி தேசிய கொடி ஏற்றினார்: கலெக்டர், எஸ்.பி. பங்கேற்பு

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் டிசம்பர் மாதம் பட்டியல் இனத்தை சேர்ந்த பெண் அமிர்தம் வேணு ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இவர் தலைவராக பதவியேற்றது முதல் கடந்த 8 மாதங்களாக அவருக்கு உரிய மரியாதை தராமல், பல சமயங்களில் அவமரியாதையாகவும் நடத்தப்பட்டிருக்கிறார். மேலும், அவர் ஊராட்சி அலுவலகத்தில் அமர்ந்து பணி செய்யவும் அனுமதிக்கப்படவில்லை. தனது பெயர் பலகையும் பொருத்தப்படவில்லை என புகார் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், கடந்த குடியரசு தினத்தன்று இவர் ஒரு அரசு பள்ளியில் தேசியக்கொடி ஏற்ற சென்றபோது, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஹரிதாஸ் அவமரியாதை செய்து, கொடியேற்ற விடாமல் தடுத்துவிட்டார். பல்வேறு வகையிலும் தன்னை ஊராட்சி பணிகளில் புறக்கணிப்பதாக மாவட்ட கலெக்டரிடம் அமிர்தம் புகார் தெரிவித்தார். இந்நிலையில், கடந்த சுதந்திர தினத்தன்று அரசு மேல்நிலைப் பள்ளி அழைப்பின்பேரில் அமிர்தம் தேசியக்கொடி ஏற்ற சென்றபோதும், அவமானப்படுத்தி திருப்பி அனுப்பி உள்ளனர்.

மேலும், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றும் வழக்கம் இல்லை என்று அமிர்தத்தை ஊராட்சி செயலர் திருப்பி அனுப்பியிருக்கிறார். இதுகுறித்த புகாரின்பேரில் ஊராட்சி செயலாளர் சசிகுமாரை மாவட்ட கலெக்டர் சஸ்பெண்ட் செய்தார். இந்நிலையில், ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்ட எஸ்பி அரவிந்தன் முன்னிலையில், ஊராட்சி மன்றத் தலைவி அமிர்தம் வேணு தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

Related Stories:

>